

புதுடெல்லி: இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியான விமான தாமதங்கள் மற்றும் சேவை ரத்துகளால் பயணிகளுக்கு ஏற்படுத்திய இன்னல்களுக்காக, மத்திய வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரூ.22 கோடி அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில், இண்டிகோ நிறுவனம் தனது குளிர்கால அட்டவணையை அமல்படுத்தியபோது மிகப்பெரிய சிக்கலைச் சந்தித்தது. புதிய விமானப் பணி நேர விதிகளை முறையாகத் திட்டமிடாமல் அமல்படுத்தியதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழியர்களின் பணி நேரத்தைஅளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தியது, போதிய மாற்றுத் திட்டங்கள் இல்லாதது மேலாண்மை குறைபாடுகள் ஆகியவற்றால் சுமார் 2,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் விமான நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.
இந்தக் குறைபாடுகளை ஆராய்ந்த வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், முறையான திட்டமிடல் இல்லாததற்காக ரூ. 1.80 கோடியும், தொடர்ந்து 68 நாட்களாக விதிமுறைகளை மீறியதற்காக நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வீதம் ரூ.20.40 கோடியும் என மொத்தம் ரூ. 22.20 கோடி அபராதம் விதித்துள்ளது. இதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க ரூ.50 கோடி வங்கி உத்தரவாதத்தை வழங்குமாறும் இண்டிகோ நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இண்டிகோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் செயல்பாட்டு அதிகாரி ஆகியோருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் மூத்த துணைத் தலைவர் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இதுவே முதல்முறை எனக் கருதப்படுகிறது.