விமான சேவை ரத்தால் பாதித்த பயணிகளுக்கு இழப்பீடு, வவுச்சர் அறிவித்த இண்டிகோ!

விமான சேவை ரத்தால் பாதித்த பயணிகளுக்கு இழப்பீடு, வவுச்சர் அறிவித்த இண்டிகோ!
Updated on
1 min read

புதுடெல்லி: விமான சேவைகள் ரத்தானதால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்பீடும், தலா ரூ.10,000 மதிப்பிலான டிராவல் வவுச்சரும் வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘எங்களது வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம்.

ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் அவரவர் வங்கிக் கணக்குகளில் திருப்பி செலுத்தப்பட்டு இருக்கிறது. விமான சேவை ரத்தால் கடந்த 3, 4, 5-ம் தேதிகளில் பயணிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர்.

அவ்வாறு பாதிக்கப்பட்டோருக்கு தலா ரூ.10,000 மதிப்பில் டிராவல் ‘வவுச்சர்கள்’ வழங்கப்படும். இதை பயன்படுத்தி இண்டிகோ விமானங்களில் பயணம் மேற்கொள்ளலாம். அடுத்த 12 மாதங்கள் வரை இந்த 'வவுச்சர்கள்' செல்லுபடியாகும். அத்துடன், அரசின் வழிகாட்டுதலின்படி பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) புதிய பணி நேர விதிகள் (எப்டிடிஎல்) காரணமாக, இண்டிகோ விமான சேவை கடந்த வாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

விமானிகள், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இண்டிகோவின்4,900 உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் மத்திய அரசு தலையிட்டதையடுத்து நிலைமை சீரடைந்து வருகிறது. எனினும், 9-வது நாளான நேற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில்தான், விமான பயணம் ரத்து செய்யப்பட்ட 12.5 லட்சம் பயணச் சீட்டுகளுக்காக ரூ.1,158 கோடி தொகையை பயணிகளுக்கு திருப்பி வழங்கியுள்ளது. அத்துடன், இழப்பீடு மற்றும் வவுச்சர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை ரத்தால் பாதித்த பயணிகளுக்கு இழப்பீடு, வவுச்சர் அறிவித்த இண்டிகோ!
நடிகை அதிதி ராவ் அசத்தல் க்ளிக்ஸ் அணிவகுப்பு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in