கோப்புப் படம்
புதுடெல்லி: இந்தியாவில் மின்சார வாகன சில்லறை விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவாக கடந்த செப்டம்பர் மாதம் 74% அதிகரித்து, 3.33 லட்சம் வாகனங்கள் விற்பனையானதாக எப்ஏடிஏ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எப்ஏடிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் மின்சார வாகனச் சந்தை கடந்த செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவில் சில்லறை விற்பனையை பதிவு செய்துள்ளது. மொத்த விற்பனை 3 லட்சத்து 33 ஆயிரத்து 634 யூனிட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 74% அதிகமாகும்.
பல்வேறு வகையான வாகனப் பிரிவுகளில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டு விகிதம் கடந்த செப்டம்பரில் சுமார் 13% உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது மாதத்தில் இது சுமார் 10% ஆக இருந்தது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எப்ஏடிஏ தலைவர் சாய் கிரிதர், “பண்டிகைக் கால தேவை, செயல்பாட்டுச் செலவு குறித்த விழிப்புணர்வு, பரந்த அளவிலான மாடல்கள், 'PM E-DRIVE' திட்டம், மாநில அரசுகளின் முற்போக்கான திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தொடர்ச்சிான கொள்கை ஆதரவு காரணமாகவே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் ஒரு மாற்றுத் தேர்வாக மட்டுமல்லாமல், இயல்பான ஒரு தேர்வாகவும் வளர்ந்து வருகிறது.
மானியங்களைவிட தேவையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் மின்சார வாகனப் போக்குவரத்து ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது” என தெரிவித்துள்ளார்.