

வாஷிங்டன்: மேற்கு ஆசியப் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையிலும், 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கணித்துள்ளது.
ஐஎம்எஃப்-ன் உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் தலா 6.5 சதவீதமாக இருக்கும். மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச சந்தைகளும் விநியோகச் சங்கிலியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதன் விளைவாக, உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்த முந்தைய மதிப்பீடு குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 3.3% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட உலகப் பொருளாதார வளர்ச்சி, தற்போது 3.1 சதவீதமாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நிலவும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்கள் விலை உயர்வால், இந்தியாவில் பணவீக்கம் 2026-ல் 4.7 சதவீதமாக உயரக்கூடும். பின்னர் 2027-ல் இது 4 சதவீதமாகக் குறையும். 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீடு 7.6% ஆக இருக்கும்.
இது கடந்த அக்டோபர் மாத கணிப்பை விட ஒரு சதவீதம் அதிகமாகும். மேற்கு ஆசியாவில் அமெரிக்கா - ஈரான் இடையிலான தற்காலிகப் போர்நிறுத்தம் இன்னும் ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கைக்கு வரவில்லை. இந்தப் போர் மேலும் தீவிரமடைந்தால், உலகப் பொருளாதார வளர்ச்சி 2026-ல் 2 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது. எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்தால் பாதிப்பு இன்னும் கடுமையாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.