

புதுடெல்லி: அமெரிக்க அதிகாரிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகள் அடங்கிய உயர் மட்டக் குழு அடுத்த வாரம் வாஷிங்டன் செல்லவுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளதாவது: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகள் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு வர்த்தக அதிகாரிகளுக்கு இடையிலான இந்த இருதரப்பு சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் முதலில் கடந்த மார்ச் மாதமே கையெழுத்தாக வேண்டியிருந்தது.
எனினும், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து அந்நாட்டின் இறக்குமதி வரி விதிப்பு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் சூழல் மாறியுள்ளது. அமெரிக்காவின் புதிய உலகளாவிய வரி விதிப்புக் கட்டமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட கட்டமைப்பை இறுதி செய்ததாக இரு நாடுகளும் அறிவித்தன. அந்த உடன்படிக்கையின்படி, இந்தியா மீதான இறக்குமதி வரிகளை 18 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டிருந்தது. ஆனால், அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வரி விதிப்பு முறைகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, வரி விதிப்புக் கொள்கை மாறியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 24-ம் தேதி முதல் 150 நாட்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் 10 சதவீத வரியை அதிபர் ட்ரம்ப் விதித்துள்ளார். இந்த மாற்றங்கள் காரணமாக, கடந்த மாதம் நடைபெறவிருந்த இரு நாட்டுத் தலைமைப் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா முதலில் ஒப்பந்தத்தை இறுதி செய்தபோது, மற்ற போட்டி நாடுகளை விட சாதகமான நிலையில் இருந்தது. ஆனால், தற்போது அமெரிக்காவின் அனைத்து வர்த்தகக் கூட்டாளிகளும் ஒரே மாதிரியான 10 சதவீத வரி விதிப்பையே எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த இக்கட்டான சூழலில் நடைபெறவுள்ள உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான இந்தப் பேச்சுவார்த்தை இந்திய ஏற்றுமதியாளர்களுக்குச் சாதகமான முடிவுகளை எட்ட உதவும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம், வர்த்தகச் சட்ட பிரிவு 301-ன் கீழ் இரண்டு முக்கிய விசாரணைகளை மேற்கொண்டு வருகிற காரணத்திற்காகவும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்திய குழு சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது.