இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - நிலவரம் என்ன?

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - நிலவரம் என்ன?
Updated on
2 min read

புதுடெல்லி: அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக, அந்நாட்டுடன் வாஷிங்டனில் நடைபெற இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையை இந்தியா ஒத்தி வைத்துள்ளது.

இந்தியா - அமெரிக்கா இடையே இடையே மார்ச் மாதம் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முன்னோட்டமாக இந்திய பிரதிநிதிகளுக்கும், அமெரிக்க பிரதிநிதிகளுக்கும் இடையே வாஷிங்டனில் நாளை பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

இந்த நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 15 சதவீத கூடுதல் வரிவிதிப்பு காரணமாக தற்போது குழப்பமான சூழல் நீடிக்கிறது. குறிப்பாக, இந்திய பொருட்களுக்கு எவ்வளவு வரி விதிக்கப்படும் என்பது தொடர்பாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இதன் எதிரொலியால், இந்தியா - அமெரிக்கா இடையே நாளை நடைபெற இருந்த வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான புதிய தேதி பின்னர் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரலில் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி விதிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அந்த நாட்டு உச்ச நீதிமன்றம், புதிய வரி விகிதங்களை அண்மையில் ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் கூடுதலாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அடுத்த சில மணி நேரத்தில் வரி விகிதம் 15 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அவர் உத்தரவிட்டார். அமெரிக்க அரசின் புதிய வரி விகிதம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஆண்டு அதிபர் ட்ரம்ப் அமல்படுத்திய வரி விதிப்புக்கு முன்பாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 10 சதவீத வரியை விதித்திருந்தது. எனினும் அமெரிக்காவுக்கு மிகவும் விருப்பமான நாடு என்ற அந்தஸ்து காரணமாக இந்திய பொருட்களுக்கு 3.5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது.

இந்தச் சூழலில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரியை அமெரிக்க அரசு விதித்தது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில், ‘அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் 15 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவர் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். இது, 150 நாட்கள் மட்டுமே அமலில் இருக்கும். அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே 15 சதவீத கூடுதல் வரியை தொடர்ந்து அமல்படுத்த முடியும்.

தற்போதைய சூழலில் இந்திய பொருட்களுக்கு பழைய வரி 3.5 சதவீதம், புதிய வரி 15 சதவீதம் என 18.5 சதவீத வரி விதிக்கப்படலாம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள், மருந்துகளுக்கு அமெரிக்க அரசு ஏற்கெனவே வரி விலக்கு அளித்திருக்கிறது.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 40 சதவீத பொருட்களுக்கு வரி விதிக்கப்படாது. மீதமுள்ள 60 சதவீத பொருட்களுக்கு 18.5 சதவீத வரி விதிக்கப்படலாம்’ என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு - நிலவரம் என்ன?
Dahaad: சாதிய, பாலின பேதத்துக்கு எதிராக கர்ஜிக்கும் காவல் அதிகாரி அஞ்சலி | திரை தேவதைகள் 06

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in