இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மீதான விமர்சனமும், மத்திய அரசின் விளக்கமும்!

மோடி, ட்ரம்ப் | கோப்புப் படம்

மோடி, ட்ரம்ப் | கோப்புப் படம்

Updated on
4 min read

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட நிலையில், இந்திய பொருட்கள் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. வரி குறைப்பு சாதகமாகப் பார்க்கப்பட்டாலும் கூட, ட்ரம்ப் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பலவும் இந்தியாவுக்கு பாதகமானவை என எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதை மறுத்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக 2-வது முறை டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான புதிய வரி விகிதங்களை அவர் அறிவித்தார். அதன்படி, இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கடந்த ஜூலையில் ட்ரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம்சாட்டி ஆகஸ்ட் 6-ம் தேதி இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரியை விதித்தது.

இதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவுடான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. இதனிடையே, பிரிட்டன், நியூசிலாந்து, ஓமன் நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா மேற்கொண்டது. சமீபத்தில் 27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.

ட்ரம்ப் கூறியது என்ன?

இந்தப் பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “பிரதமர் மோடியுடன் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினேன். ரஷ்யா- உக்ரைன் போர் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தோம். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார். இனிமேல் அமெரிக்காவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும். வெனிசுலாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம். இந்த நடவடிக்கைகள் உக்ரைன் போரை நிறுத்த உதவி செய்யும்.

பிரதமர் மோடியுடன் எனக்கு நட்புறவு நீடிக்கிறது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். அமெரிக்கா - இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய நாங்கள் ஒப்புக் கொண்டோம். இதன்படி இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு இனி 18 சதவீத வரியை மட்டுமே விதிக்கும். அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண் விளைபொருட்கள், நிலக்கரி மற்றும் இதர பொருட்களை வாங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவு மேலும் வலுவடையும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி நெகிழ்ச்சி:

பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் திங்கள்கிழமை தொலைபேசியில் பேசினேன். இந்திய பொருட்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக 140 கோடி இந்தியர்களின் சார்பில் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இரு பெரும் பொருளாதார நாடுகள், இரு பெரும் ஜனநாயக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் இரு நாடுகளின் மக்கள் பலன் அடைவார்கள். உலகின் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்புக்கு அதிபர் ட்ரம்பின் சீரிய தலைமை அவசியமாகிறது. அவரது அமைதி முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும். அவரது இணைந்து செயல்படுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக் குரல்:

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்விகளை எழப்பினர். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறி இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய அவர்கள், அமெரிக்காவிடம் இருந்து விவசாயப் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்யும் என்ற அறிவிப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளை இந்தியா பூஜ்ஜியமாக மாற்றும் என ட்ரம்ப் கூறியிருப்பது குறித்தும் அவர்கள் விமர்சித்தனர்.

அமெரிக்காவின் அறிவிப்பு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் எம்.பி கே.சி.வேணுகோபால் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார். மற்றொரு காங்கிரஸ் எம்பி ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “அமெரிக்க - இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்து மாநிலங்களவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும். இதில் இந்திய விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது” என குற்றம்சாட்டினார். அப்போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவையில் பேசிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, “இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்து அரசு தானாக முன்வந்து ஓர் அறிக்கையை வெளியிடும். மேலும், இது குறித்து விவாதமும் நடத்தும்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தி கூறியது என்ன?

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி கலக்கம் அடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கி இருந்த இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் மோடி நேற்றிரவு கையெழுத்து இட்டுவிட்டார். அவர் மீது கடும் அழுத்தம் உள்ளது. அவரது இமேஜ் சேதமடையலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார். பொதுமக்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் சமரசம் செய்து கொண்டதன் மூலம் பிரதமர் மோடி, மக்களின் கடின உழைப்பை விற்றுவிட்டார். நாட்டை அவர் விற்றுவிட்டார். நரேந்திர மோடி அச்சமடைந்துள்ளார். ஏனெனில், அவரது பிம்பத்தை வடிவமைத்தவர்களே இப்போது அதை உடைக்கிறார்கள்” என கூறினார்.

பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டார் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “அமெரிக்காவில் அதானி மீது ஒரு வழக்கு உள்ளது. உண்மையில் அது மோடி மீதான வழக்கு. எப்ஸ்டீன் கோப்புகளில் இன்னும் வெளியிடப்படாத கோப்புகள் உள்ளன. இவை இரண்டும் அழுத்தத்துக்கான காரணிகள். இதை நாடு புரிந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>மோடி, ட்ரம்ப் | கோப்புப் படம்</p></div>
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: ரகசிய ஆவணங்களும், வலுக்கும் ‘பாலியல் பயங்கரம்’ சர்ச்சையும்!

சசி தரூர் கருத்து:

காங்கிரஸ் எம்பி சசி தரூர், “அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விளக்கம் மட்டும்தான் கேட்கின்றன. அந்த ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் சமூக ஊடக பதிவும், பிரதமர் மோடியின் சமூக ஊடக பதிவும்தான் நம்மிடம் உள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இவை மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா?

இந்த ஒப்பந்தத்தில் இந்திய விவசாயம் தொடர்பாக என்ன இருக்கிறது என்பதை அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 500 பில்லியன் டாலர் மதிப்புள்ள இறக்குமதிகளை மேற்கொள்ளும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். நமது மொத்த இறக்குமதியே 700 பில்லியன் டாலர்தான். அப்படியானால், நாம் மற்ற நாடுகளில் இருந்து மேற்கொள்ளும் இறக்குமதிகளை நிறுத்தப் போகிறோமா? இந்த ஒப்பந்தம் தொடர்பான செய்தி நல்லதாக இருந்தால் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நிர்மலா சீதாரமன் கருத்து:

இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பு 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைந்தது மிகவும் நல்ல செய்தி. இந்தியாவின் ஏற்றுமதி இனி அதிகரிக்கும்” என தெரிவித்துள்ளார்.

வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும்; ஆழப்படுத்தும். இது அமெரிக்க சந்தையில் நமது தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், உயர்மட்ட தொழில்நுட்ப துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கு இது ஊக்கமளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

பியூஷ் கோயல் விளக்கம்:

இந்திய - அமெரிக்க வர்த்தகம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல், “இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நேற்றிரவு இறுதி செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம், நாட்டின் 140 கோடி மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டு வரும்.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் நாடாளுமன்றத்தில் பேச விரும்பினோம். ஆனால், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளான திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகியவையும் நாடாளுமன்றத்தில் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதைப் பார்த்தோம்.

விவசாயம் மற்றம் பால்வளம் ஆகிய இரு துறைகள் விஷயத்தில் பிரதமர் எப்போதும் மிகுந்த கவனத்தை செலுத்தி, அவர்களின் நலன்களை கவனித்து, அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் கிடைப்பதை உறுதி செய்ய தொடர்ந்து உழைத்துள்ளார். அவர்களின் நலன்களில் சமரசம் செய்துகொள்ள பிரதமர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவை மட்டுமல்ல, இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் முக்கிய துறைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்பதை முழு நாடும் புரிந்து கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் அல்ல. இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான ஒரு மைல்கல். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்வதைக் காண்பதற்கு இது ஒரு நல்ல அறிகுறி. இந்த ஒப்பந்தம் இந்தியர்களின் நலன்களைப் பாதுகாக்கும். ஜவுளி, ஆடைகள், பிளாஸ்டிக், வீட்டு அலங்காரம், தோல் மற்றும் காலணி, கற்கள் மற்றும் நகைகள், ரப்பர் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதிக்கு மிகப் பெரிய வாய்ப்புகள் உருவாகும்” என தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மோடி, ட்ரம்ப் | கோப்புப் படம்</p></div>
எப்ஸ்டீன் ஃபைல்ஸ்: ரகசிய ஆவணங்களும், வலுக்கும் ‘பாலியல் பயங்கரம்’ சர்ச்சையும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in