

புதுடெல்லி: எரிபொருள் தேவைக்கு எந்த ஒரு தனி நாட்டையும் சார்ந்திருக்க விரும்பாத இந்தியா, பல நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது. தற்போது ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை அதிகம் கொள்முதல் செய்கிறது.
ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்தன. ஆனால், ரஷ்யாவின் நட்பு நாடுகளான இந்தியா மற்றும் சீனா ஆகியவை ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தன. இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா வழங்கி வந்தது.
ஆனால், இதற்காக இந்தியாவுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தி நெருக்கடி கொடுத்தது. இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாயின. தற்போது ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ரஷ்யாவிடம் தற்காலிகமாக கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா ஒரு மாதம் அனுமதி அளித்தது.
இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு எப்போது ஒரு குறிப்பிட்ட நாட்டை சார்ந்திருப்பதில்லை. வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. தற்போது ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குவதை இந்தியா அதிகரித்துள்ளது.
2 மில்லியன் பேரல்: அங்கோலாவில் இருந்து சமீபத்தில் இந்தியா 2 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்கியது. தற்போது மேலும் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிருந்து ஹங்கோ மற்றும் க்ளோவ் ரக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இது ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உகந்த ரகமாகும். இதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் அதிகளவில் பெற முடியும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய், காஸ் ஆகியவற்றுக்கு நெருக்கடி ஏற்பட்டாலும், இந்தியாவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாத வகையிலும், விலை ஏற்றத்தை தடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நாடுகளில் அவசரமாக கொள்முதல் செய்து வருகிறது.