இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
Updated on
1 min read

புது டெல்லி: இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவும் நியூஸிலாந்தும் இன்று தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்தியா - நியூஸிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நியூஸிலாந்தின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு அமைச்சர் டாட் மெக்ளே ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர்.

இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அனைத்து வரி விதிப்பு முறைகள் மற்றும் உற்பத்திப் பிரிவுகளையும் உள்ளடக்கி, நியூஸிலாந்துக்கான இந்தியாவின் 100 சதவீத ஏற்றுமதிக்கு வரிவிலக்கு அளிக்கிறது.

மேலும், இந்த ஒப்பந்தம் மூலம் ஜவுளி, தோல், காலணிகள், ரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற அதிக தொழிலாளர் தேவைப்படும் துறைகளில் ஏற்றுமதியை மேம்படுத்துவதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் வேலைவாய்ப்பையும் கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நியூஸிலாந்து பீங்கான் பொருட்கள், தரைவிரிப்புகள், வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட முக்கிய இந்திய ஏற்றுமதிகள் மீது 10 சதவீதம் வரையிலான உச்சபட்ச வரியைத் தொடர்ந்து விதித்திருந்தது. இனி நியூஸிலாந்திற்கான ஏற்றுமதிகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதால், இந்தியப் பொருட்கள் அந்நாட்டில் அதிகளவில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நியூஸிலாந்தின் 30 சதவீத வரிப் பிரிவுகளின் கீழ் வரும் மரம், கம்பளி, ஆட்டு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்படாத தோல் போன்ற பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு அளிக்கும்.

இதேபோல், பெட்ரோலிய எண்ணெய், மால்ட் சாறு, தாவர எண்ணெய்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மின் மற்றும் இயந்திர சாதனங்கள், மற்றும் பெப்டோன்கள் உள்ளிட்ட 35.60 சதவீத வரிப் பிரிவுகளுக்கு, 3, 5, 7 மற்றும் 10 ஆண்டுகள் எனப் படிப்படியாக வரி விலக்கு அளிக்கப்படும்.

வரிச் சலுகைகளைப் பெறும் நியூஸிலாந்து தயாரிப்புகளில் ஒயின், மருந்துப் பொருட்கள், பாலிமர்கள், அலுமினியம், இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் ஆகியவை அடங்கும்

இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவுக்குள் 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை ஈர்ப்பதற்கான ஒரு உறுதிமொழியும் இடம்பெற்றுள்ளது.

2024-ஆம் ஆண்டில், பொருட்கள் மற்றும் சேவைகள் சார்ந்த இருதரப்பு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
ஈரான் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களின் சேதத்தை சரிசெய்ய செலவு எவ்வளவு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in