

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்ட கைவினை சந்தையில், இந்திய கைவினை கவுன்சில் சார்பில் அரங்கம் அமைத்துள்ள பல்வேறு மாநில கலைஞர்களுடன், கவுன்சில் தலைவர் விசாலாட்சி ராமசுவாமி உள்ளிட்டோர்.
சென்னை: இந்திய கைவினைக் கவுன்சில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கைவினை சந்தை 2026’ கண்காட்சி தொடக்க விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
கவுன்சில் தலைவர் விசாலாட்சி ராமசுவாமி கண்காட்சியை திறந்துவைத்துப் பார்வையிட்டார். கவுன்சிலின் கண்காட்சிப் பொறுப்பாளர்கள் இபா கபூர், ஆஷா ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சி குறித்து இபா கபூர் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு, அவர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்துவது சிரமமாக உள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, இந்திய கைவினைக் கவுன்சில் சார்பில், கைவினைக் கலைஞர்களின் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. வரும் 17-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காட்சியைப் பார்வையிடலாம்.
ராஜஸ்தான், குஜராத், ஒடிசா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட மாநிலங்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 64 விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் மண், கல், மரம், தோல், பருத்தி, சணல் மற்றும் காகிதம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், காலணிகள், தரை விரிப்புகள், மரத்தால் செய்யப்பட்ட சுவாமி சிலைகள், பட்டு மற்றும் பருத்தி, எம்பிராய்டரி புடவைகள், ரெடிமேடு ஆடைகள், சுடிதார் போன்ற துணிகள் உள்ளிட்டவை விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில் ரூ.100 முதல் ரூ.65 ஆயிரம் வரையிலான பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.