

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை அதிகரித்துவருகிறது. சில நேரங்களில் விலை குறைந்தாலும், மீண்டும உயர்ந்து விடுகிறது.
கடந்த டிச. 15-ல் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. பின்னர், தங்கம் விலை உயர்ந்து வந்தது. டிச. 27-ல் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.240 குறைந்து, ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 400-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.30 குறைந்து ரூ.12,800-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 704-க்கு விற்கப்பட்டது. அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ரூ.277-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.6 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.