

படம்: மெட்டா ஏஐ
சென்னை: தங்கம், வெள்ளி விலை இந்த ஆண்டின் கடைசி நாளான இன்று (டிச.31, 2025) ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது. பவுன் ரூ.1 லட்சத்துக்கும் கீழ் சரிந்தது வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
சர்வதேசப் பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த டிச.15-ல் ஒரு பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை பதிவு செய்தது. பின்னர் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில் டிச.27ம் தேதி ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800-ஆக உயர்ந்து, மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. இதுபோல, வெள்ளியும் கிலோவுக்கு ரூ.2.85 லட்சமாக அதிகரித்து புதிய உச்சத்தை பதிவு செய்தது.
நேற்று முன்தினம் தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்தது. இந்நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,360 குறைந்து, ரூ.1 லட்சத்து 800-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (டிச.31) காலை ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.12,550-க்கு விற்கப்பட்ட நிலையில், மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும், பவுனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு பவுன் ரூ.99,840-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் காலையில் ஒரு கிராம் ரூ.258 என்றிருந்த நிலையில் மாலையில் ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.257-க்கு விற்பனையாகிறது.
தொடர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? - சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ். சாந்தக்குமார் கூறும்போது, “கடந்த வாரம் கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக சர்வதேச அளவில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதையொட்டி, முதலீட்டாளர்கள் தங்கத்தை வாங்கிக் குவித்தால், விலை உயர்ந்தது.
ஆனால், குறுகியகால லாபத்தைக் கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றதால், விலை குறைந்துள்ளது. வெள்ளி விலை குறைவுக்கும் இதுவே காரணம். வரும் நாட்களில் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும். பண்டிகை காலத்தில் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளது” என்றார்.