

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (மார்ச் 30) காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.480 என குறைந்தது. இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களின் மீதும் எதிரொலிக்கிறது. வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,600-க்கும், பவுனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,08,800-க்கும் விற்பனை ஆகிறது. 24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,18,696-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு பவுன் ரூ.90,760-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,50,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.