

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 6,240-க்கு விற்கப்பட்டது.
கடந்த டிச.15-ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்கப்பட்டது. இதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. டிச.27-ல் ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4,800 ஆக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதன்தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.880 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 6,240-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 உயர்ந்து ரூ.13,280 ஆக இருந்தது. 24 காரட் தங்கம் ரூ.1 லட்சத்து 15,896-க்கு விற்கப்பட்டது.
இதுபோல, வெள்ளி விலையும் உயர்ந்தது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.307 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் உயர்ந்து, ரூ.3 லட்சத்து 7 ஆயிரமாகவும் இருந்தது. தங்கம், வெள்ளி உயர்வு குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தக்குமார் கூறியதாவது: கிரீன்லாந்து பிரச்சினை, ஈரானில் பதற்றமான சூழ்நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு உயர்வுபோன்ற காரணங்களால், தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
இதுதவிர, பண்டிகை காலத்தில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்த காரணங்களால் தங்கத்தின்விலை உயர்ந்துள்ளது. ஓரிரு வாரங்களுக்கு விலை உயர்வு நீடிக்கும். இவ்வாறு கூறினார்.