

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாதவகையில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்து, ரூ.98,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்ஒரு பவுன் ரூ.57,200-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் விலை அதிகரித்து கொண்டே சென்றது.
கடந்த அக்.17-ம் தேதி 97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. இதையடுத்து தீபாவளிமுடிந்த பின்னர் ஒரு பவுன் விலை ரூ.88,600 ஆகக் குறைந்தது. பின்னர் நவ.13-ம் தேதி ரூ.95,920 ஆக உயர்ந்தது. அதைத்தொடர்ந்து ஒரு மாத காலத்துக்கு ஏற்ற இறக்கமாக இருந்த தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களாக மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
அதன்படி கடந்த டிச.5-ம் தேதி ரூ.96,000 ஆக இருந்த தங்கம், டிச.8-ம் தேதி வரை ரூ.96,320-க்கு விற்கப்பட்டது. பின் டிச.9 அன்று மட்டும் குறைந்து டிச.10-ம் தேதி முதல் மீண்டும் விலை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் ஆபரணத்தங்கம் ரூ.96,400-க்கு விற்கப்பட்டது.
இதன்தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று புதிய உச்சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் முதல்முறை ரூ.98 ஆயிரத்தை கடந்துள்ளது. அதன்படி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.98,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.320 அதிகரித்து, ரூ.12,370-க்கு விற்பனையானது. 24 காரட் தங்கம் ரூ.1,07,952 ஆக இருந்தது.
ஏற்கெனவே, தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை கடக்கும் என வர்த்தக வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், அதற்கேற்ப விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குடும்பத் தலைவிகளை கவலை யடையச் செய்துள்ளது. தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளியின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 5-ம் தேதி ஒரு கிராம் வெள்ளி ரூ.196 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1.96 லட்சமாக இருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து நேற்று ஒரு கிராம் வெள்ளி 216 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.16 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.