

புதுடெல்லி: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தகுதியுள்ள சுங்கச்சாவடியில் இருந்து 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிக்கும் உள்ளூர் மக்களின் வசதிக்காக, டிஜிட்டல் உள்ளூர் பாஸ் வழங்கப்படுகிறது.
இந்தப் பாஸைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடியை அந்த மாதம் முழுவதும் விதிமுறைகளுக்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டுமானாலும் வாகனங்களில் கடந்து செல்லலாம். மாதம் ரூ.350 முதல் கிடைக்கும் இந்த பாஸ், ஒரே சுங்கச்சாவடியை வழக்கமாகக் கடந்து வேலைக்குச் செல்வோர், தினசரி தேவைகளுக்காகப் பயணம் செய்வோர் மற்றும் தொடர்ந்து பயணம் மேற்கொள்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த டிஜிட்டல் பாஸ் வசதி முதன்முதலில் கடந்த ஜூலை மாதம் டெல்லியில் உள்ள முந்த்கா பக்கர்வாலா என்ற சுங்கச்சாவடியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் தற்போது இந்த வசதியை நாடு முழுவதும் 121 சுங்கச்சாவடிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவுபடுத்தப்பட்டுள்ள 121 சுங்கச்சாவடிகளில் மட்டுமே இந்தப் பாஸ் வசதி கிடைக்கும்.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள சுங்கச்சாவடி டிஜிட்டல் பாஸ் வசதியில் இடம்பெற்றுள்ளதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இந்த வசதியை பெற ராஜ்மார்க்யாத்ரா என்ற செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதை பொதுமக்களுக்கு எளிதானதாகவும், வசதியானதாகவும் மாற்றும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு இந்த பாஸ் பெற விரும்பியவர்கள் சம்பந்தப்பட்ட சுங்கச்சாவடிக்கு நேரில் சென்று, தாங்கள் 20 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவர்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. புதிய டிஜிட்டல் முறை மூலம் இந்த ஆவணப் பணிகள் குறைக்கப்பட்டு, விண்ணப்ப நடைமுறை விரைவாகவும் வெளிப்படையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.