உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் போராட்டம்: மேட்டுப்பாளையம் மண்டியில் 300 டன் உருளைக்கிழங்கு தேக்கம்

உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் போராட்டம்: மேட்டுப்பாளையம் மண்டியில் 300 டன் உருளைக்கிழங்கு தேக்கம்

Published on

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த இரண்டு நாட்களில் 300 டன் உருளைக்கிழங்குகள் தேக்கமடைந்துள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் கடந்த 1935-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் 618 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு குன்னூர், ஊட்டி, கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளையும் உருளைக்கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகள் மூலம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

உருளைக்கிழங்குகள் ஊழியர்களால் தரம் பிரிக்கப்பட்டு 45 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டி வைக்கப்படுகின்றன. பின்னர், உருளைக்கிழங்கின் தரத்திற்கு ஏற்ப வியாபாரிகள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.

கடந்த 9-ம் தேதி நடந்த ஏலத்தின்போது மொத்தமாக 34 லோடுகள் (சுமார் 306 டன்) உருளைக்கிழங்குகள் வரத்து இருந்தது. அதிகபட்சமாக ஒரு டன் ரூ.1,440, குறைந்தபட்சமாக ரூ.1,060 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விலை கட்டுப்படியாகாது, குறைந்தபட்ச ஆதார விலை வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏலம் பாதியில் நிறுத்தப்பட்டது. விவசாயிகளின் தொடர் எதிர்ப்பு காரணமாக இரண்டாவது நாளாக நேற்று நீலகிரி மாவட்ட விவசாயிகள் யாரும் உருளைக்கிழங்குகளை விற்பனைக்காக கொண்டு வரவில்லை.

இந்நிலையில், உரிய விலை கிடைக்கும் வரை ஏலம் நடத்தக்கூடாது என கூறி அலுவலக வளாகத்தில் இன்று விவசாயிகள் திரண்டனர். அவர்களுடன் நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணைப்பதிவாளர் முத்துக்குமார், சார்-பதிவாளரும், மேலாளருமான நிஸார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, விவசாயிகள் தரப்பில் “விதை உருளைக்கிழங்குகளை ரூ.1,600 வரை விலை கொடுத்து பெற்று நடவு கூலி, பராமரிப்பு செலவு, உரம், பறிக்கும் கூலி என செலவுகள் அதிகரித்து வருவதால் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும்.

கடந்த 9-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 34 லோடு உருளைக்கிழங்கினை முதலில் ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. இதனை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த இரண்டு நாள் போராட்டம் காரணமாக சுமார் 300 டன் அளவிற்கு உருளைக்கிழங்குகள் தேக்கமடைந்த நிலையில், இன்று மீண்டும் உருளைக்கிழங்கு ஏலம் தொடங்கியது.

உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் போராட்டம்: மேட்டுப்பாளையம் மண்டியில் 300 டன் உருளைக்கிழங்கு தேக்கம்
“கூட்டணி கட்சிகளுக்கு போக மீதமுள்ள 24 தொகுதிகளில் மட்டுமே அதிமுக போட்டியிடும்” - அமைச்சர் ஐ.பெரியசாமி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in