

புதுடெல்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி அடைந்தாலும், இந்தியா அந்நியச் செலாவணியைச் சேமிப்பதை நிறுத்திவிட முடியாது என சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி ஏற்பட்டாலும், அந்நியச் செலாவணியை சேமிப்பதை நிறுத்திவிட முடியாது. நமது பொருளாதாரம் நன்றாக வளர்ந்து வருகிறது. இருப்பினும், எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலும் நாம் இன்னும் இறக்குமதியைச் சார்ந்தே இருக்கிறோம்.
ஜப்பான், தைவான், தென் கொரியா, சீனா ஆகிய அனைத்தும், விரைவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும், அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டிய கட்டாயத்தையும் கடந்து வந்தன. மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக வளர்வதற்கு கிழக்கு ஆசிய நாடுகள் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டன என்பதைப் பார்க்க வேண்டும்.
அனைத்து மேம்பட்ட தொழில்நுட்பங்களிலும் நாம் திறனை வளர்த்துக்கொண்டு, நாமே தொழில்நுட்பத்தை உருவாக்கி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் எரிசக்தித் துறையில் தற்சார்பை எட்டிய பிறகு, அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்காது. எனவேதான், வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும், தேவையின்றி தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடுகளில் திருமணங்களை நடத்த வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்மை அறிவுறுத்தி உள்ளார். இவ்வாறு ஸ்ரீதர்வேம்பு தெரிவித்துள்ளார்.