

புதுடெல்லி: மத்திய அரசு தங்கம் மீதான இறக்குமதி வரியை 6-லிருந்து 15% ஆக உயர்த்தியதை அடுத்து, இந்திய நகை சந்தையில் தேவை 70% வரை சரிந்துள்ளது.
மேற்கு ஆசிய போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை அந்நியச் செலாவணி கையிருப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை சமாளிக்க கடந்த மே 13-ம் தேதி தங்கம் மீதான இறக்குமதி வரியை 6-லிருந்து 15% ஆக மத்திய அரசு உயர்த்தியது. ஜிஎஸ்டி வரிகளையும் சேர்த்து தங்கம் மீதான ஒட்டுமொத்த வரிச் சுமை தற்போது 9.18%-லிருந்து 18.45%-ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மே 27-ம் தேதியுடன் முடிந்த 15 நாட்களில் தங்கத்தின் தேவை சுமார் 7.5 டன்னாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் சுமார் 25 டன்னாக இருந்தது. அதாவது, இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால் தங்கத்தின் தேவை 70 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.
இதுகுறித்து இந்திய தங்க நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் (ஐபிஜேஏ) தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா கூறும்போது, “இந்தியாவின் தங்க வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 65 சதவீதத்தைக் கொண்டுள்ள ஒழுங்கமைக்கப்படாத துறை இந்த வரி உயர்வால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
கச்சா எண்ணெய் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த வரி உயர்வும் சேர்ந்து கொண்டதால் நுகர்வோரின் வாங்கும் ஆர்வம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜோயாலுக்காஸ் நிறுவன தலைவர் ஜோய் ஆலுக்காஸ் கூறும்போது, ‘அதிக இறக்குமதி வரி மட்டுமே தேவையை பாதிக்கவில்லை. தங்கம் வாங்குவதைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோளும், சுப காரியங்களைத் தவிர்க்கும் ‘அதிக் மாசம்' காலமும் இந்த மந்தநிலைக்குக் கூடுதல் காரணங்களாக அமைந்துள்ளன. அத்துடன் முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குவது கூட குறைந்துள்ளது’ என்றார்.