

புதுடெல்லி: நாட்டின் உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் 2025-26 நிதியாண்டில் மொத்த அந்நிய நேரடி முதலீடு 9,000 கோடி டாலரை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள், ஒரு நிறுவனத்தில் 10 சதவீதத்திற்கும் குறைவான பங்குகளை வைத்திருந்தால், அதற்கு தானியங்கி முறை மூலம் அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை கடந்த மார்ச் 10-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை இது குறித்த முதற்கட்ட அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் கீழ் சில திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இது குறித்து டிபிஐஐடி இணைச் செயலாளர் ஜெய் பிரகாஷ் சிவஹாரே கூறுகையில், "பொருளாதார விவகாரங்கள் துறை அந்நிய முதலீடு குறித்த அறிவிப்பை ஃபெமா சட்டத்தின் கீழ் வெளியிடும். தற்போதைய சட்டங்களுடன் புதிய விதிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இது மிக விரைவில் நடைமுறைக்கு வரும்" என்றார்.
புதிய விதிகளின் மூலம் தேங்கிக் கிடக்கும் சுமார் 600 முதலீட்டு விண்ணப்பங்களுக்கு விரைவில் தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ள 7 முக்கியத் துறைகளில், அரிய வகை நிரந்தரகாந்தங்கள், அரிய வகை தாதுக்கள் சுத்திகரிப்பு, பாலிசிலிக்கான்- இங்காட்-வேஃபர், மேம்பட்ட பேட்டரி பாகங்கள், மின்னணு பாகங்கள் தயாரிப்பு மூலதனப் பொருட்கள் உற்பத்தி, மின்னணு மூலதனப் பொருட்கள் உற்பத்தி ஆகியவை அடங்கும். இந்தத் துறைகளில் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நிறுவனங்களுக்கு 60 நாட்களுக்குள் அனுமதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதேநேரம், சீனா, ஹாங்காங், பாகிஸ்தான் அல்லது வங்கதேசம் ஆகிய நாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு தானியங்கி முறை அனுமதிபொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது" என்றார்.