

சென்னையில் இசை விழா களைகட்டத் தொடங்கிவிட்டது. மியூசிக் அகாடமி, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், ஸ்ரீபார்த்த சாரதி சுவாமி சபா, நாரதகான சபா, ஆர்.ஆர்.சபா, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா, பிரம்ம கான சபா, ஸ்ரீ கிருஷ்ண கான சபா, பாரதிய வித்யா பவன் உள்ளிட்ட பெரும்பான்மையான சபாக்களில் இசைக் கச்சேரிகளும் கருத்தரங்கு களும் தொடங்கிவிட்டன. செவிக்கு உணவுடன் வயிற்றுக்கும் உணவு கிடைத்தால் இசை ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
சென்னை இசை விழாக்களின் பாரம்பரியம் 1930-களில் தொடங்கியது. மெல்ல மெல்ல 1940-களில் கச்சேரி நடைபெறும் இடங்களில் உணவகங்கள் உருவாகத் தொடங்கின. சென்னையின் 'சபா உணவக பாரம்பரியம்' 85 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது என்றே சொல்லலாம்.
அறுசுவை நடராஜன் கேட்டரிங், மவுண்ட் பேட்டன் மணி ஐயர் கேட்டரிங், நம்ம வீட்டு கல்யாணம் கேட்டரர்ஸ், ஸ்ரீ ஜெய ராக வேந்திரா கேட்டரர்ஸ், சேஷா கேட்டரர்ஸ், மீனாம்பிகா கேட்டரர்ஸ், ஞானாம்பிகா கேட்டரர்ஸ், வீனஸ் கேட்டரிங் சர்வீசஸ், மைலாப்பூர் ஸ்ரீ சங்கரா கேட்டரர்ஸ், எல்.வி. பட்டப்பா கேட்டரிங், மிண்ட் பத்மநாபன் கேட்டரிங், அனு கேட்டரிங் சர்வீசஸ் என்று உணவகங்கள் தொடர்ந்தன. இன்னும் சாஸ்தா கேட்டரிங், ஸ்ரீ சாஸ்தாலயா கேட்ட ரிங், ஏபிசி கேட்டரிங், சத்வா கேட்டரிங் சர்வீஸ் என்று பட்டியல் நீள்கிறது.
கச்சேரி உணவகங்கள் தொடர்பாக கூல் ஈவென்ட்ஸ் குழுவின் ஓர் அங்கமாக விளங்கும் சத்வா கேட்டரிங் சர்வீஸின் நிறுவனர் ஆர்.எஸ்.குமார் கூறும்போது, “ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா (வாணி மகால்) மற்றும் ஸ்ரீ கிருஷ்ண கான சபாவில் தற்போது உணவகம் அமைத்துள்ளோம்.
இந்த உணவகங்களில் தினமும் மதியம் 12 முதல் 2.45 மணி வரை தலை வாழை இலை விருந்து (கல்யாண விருந்து) அளிக்கப்படுகிறது. மாலை 4.30 முதல் 6.30 மணி வரை ஸ்வீட், பஜ்ஜி, வடை வகைகள் அளிக்கப்படுகின்றன. இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை அடை அவியல், தோசை வகைகள், சப்பாத்தி, சேமியா ரவா பாத் உள்ளிட்டவை கிடைக்கும். தினம் தினம் மெனு மாறிக்கொண்டே இருக்கும்.
இசை ரசிகர்களின் மேலான கருத்துகளை ஏற்று, ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வோம். அனைத்து உணவு வகைகளையும் அனைவருக்கும் ஏற்ற விலையில் கொடுப்பதற்கே விரும்புகிறோம். இசை ரசிகர்கள், உணவுப் பிரியர்களின் திருப்தியே எங்கள் நோக்கம். எங்கள் உணவு அரங்கில் இசைக் கச்சேரி, சாப்பாட்டுக் கச்சேரியுடன் நடைபெறும் அரட்டைக் கச்சேரியும் சுவாரசியம்தான்" என்றார்.