ஏற்காட்டில் காஃபி விளைச்சல் உயர்வு - விற்பனையும் அமோகம்

ஏற்காட்டில் காஃபி விளைச்சல் உயர்வு - விற்பனையும் அமோகம்
Updated on: 
2 min read

சேலம்: ஏற்காட்டில் கடந்த ஆண்டு அரபிக்கா காஃபி விளைச்சல் 4 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. நடப்பாண்டு 4,150 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளதால் தோட்ட அதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காஃபி தேவை அதிகரித்துள்ள நிலையில் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

கிழக்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் கொஞ்சும் சேர்வராயன் மலைத்தொடர் கடல் மட்டத்தில் இருந்து 5,,200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஏற்காடு மலை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல் இந்திய அளவில் காஃபி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஏற்காட்டில் ஆண்டு முழுவதும் குளுமையான ஒரே சீதோஷ்ண நிலை நிலவுவதால், காஃபி உற்பத்தி அமோகமாக உள்ளது. இங்கு அரபிக்கா, ரொபஸ்டா ஆகிய இரண்டு வகையான காஃபி பயிர் விளைகிறது. அதிகளவு அரபிக்கா வகை காஃபி விளைவிக்கப்படுகிறது. இங்கு விளையும் காஃபிக்கு உலக அளவில் வர்த்தக வரவேற்பு உள்ளது.

உயரம் குறைந்த மலைப்பகுதியான ஏற்காடு, கொல்லிமலை, கல்வராயன் மலையில், ஆண்டுதோறும் காஃபி  உற்பத்தி அமோகமாக நடக்கிறது. கடந்த 2024-25-ம் ஆண்டில் ஏற்காட்டில் அரபிக்கா 4,000 மெட்ரிக் டன்னும், ரொபஸ்டா 25 மெட்ரிக் டன்னும் உற்பத்தியானது. 2025-26-ம் ஆண்டில் அரபிக்கா 4,150 மெ.டன்னும், ரொபஸ்டா 25 மெ.டன்னும் உற்பத்தியாகியுள்ளது.

காஃபி தோட்டத்தில் ஊடுபயிராக மிளகு வளர்க்கப்படுவதால், விவசாயிகள் இரட்டிப்பு லாபம் ஈட்ட ஏதுவாக அமைந்துள்ளது. இந்தியாவில் பயிராகும் காஃபி சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஆண்டு தோறும், 3 லட்சம் டன்னுக்கு மேல் காஃபி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், கடந்த 2023-ம் ஆண்டு 3.76 லட்சம் டன்னும், 2024-ம் ஆண்டு 4.03 லட்சம் டன்னும் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், காஃபி ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு சராசரியாக, ரூ.2,500 கோடி அந்நிய செலாவணி ஈட்டப்படுகிறது. காஃபி தொழிலை மேம்படுத்த விவசாயிகளுக்கு மானிய கடனுதவி திட்டம் மூலம் நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

கிழக்கு தொடர்ச்சி மலையான ஏற்காடு, சேர்வராயன் மலை, கொல்லிமலைப் பகுதியில் அதிகளவு காஃபி விவசாயிகள் உள்ளனர். ஏற்காட்டில், 5,100 ஹெக்டேர் பரப்பளவில் காஃபி பயிரிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக, 3,000 முதல், 4,000 டன் வரை காஃபி உற்பத்தி செய்யப்படுகிறது. காஃபி தோட்ட தொழிலில், 2,197 விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கொல்லிமலையில், 736 ஹெக்டேர் நிலப்பரப்பளவில் காஃபி விவசாயம் நடந்து வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக 400 டன் முதல், 500 டன் வரை காஃபி உற்பத்தி செய்யப்படுகிறது. சேர்வராயன் மலை, கொல்லிமலையில் 5,836  ஹெக்டேரிலும்,  கல்வராயன் மலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் 142 ஹெக்டேர் நிலப்பரப்பில் காஃபி உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது ரொபஸ்டா சந்தை மண்டி விலை சராசரியாக கிலோவுக்கு ரூ.209 என்ற அளவில் தொடங்குகிறது. மொத்த விற்பனையில் 50 கிலோ மூட்டை ரூ.10,000 வரை தரத்தைப் பொறுத்து வர்த்தகம் செய்யப்படுகிறது. அரபிக்கா கிலோ ஒன்றுக்கு ரூ.460 முதல் ரூ.655 வரை (பச்சை/தரமான கொட்டைகள்) விற்கப்படுகிறது.

பிரீமியம் அல்லது வறுத்த பிய்பெர்ரி போன்ற வகைகள் கிலோ ரூ.1,300-க்கும் மேல் வரை விற்பனையாகின்றன. காஃபி உற்பத்தியைக் காட்டிலும் தேவை கூடுதலாக உள்ளதால், வரும் மாதங்களில் காஃபி விலை உயரக்கூடும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

காஃபி தொழில் லாபகரமானதாக உள்ளதால், இத்தொழிலில் ஈடுபடும்  விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து, ஆர்வமுடன் செயலாற்றி வருகின்றனர். இளைஞர்களிடம் இன்ஸ்டன்ட் காஃபி அருந்தும் பழக்கம் அதிகரித்துள்ளதால், காஃபி தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் விற்பனை அமோகமாக இருந்து வருவதாக காஃபி எஸ்டேட் அதிபர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஏற்காட்டில் காஃபி விளைச்சல் உயர்வு - விற்பனையும் அமோகம்
“தமிழகத்தில் பொருளாதார நெருக்கடிக்கு வாய்ப்பு” - கிருஷ்ணசாமி எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in