

கோப்புப் படம்
நாகப்பட்டினம்: தமிழகம், ஆந்திரா, கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை அடுத்தடுத்து மூட தமிழ்நாடு அரசின் கைத்தறித் துறை முடிவெடுத்துள்ளதற்கு கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாகையில் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுப் பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த சங்க சிறப்புத் தலைவர் பாரதி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கோ-ஆப்டெக்ஸ் கடைகள் தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உட்பட 15 மாநிலங்களில் இயங்கி வருகின்றன.
தற்போது 145 கடைகள் உள்ள நிலையில், தவெக அரசு தமிழகத்தில் 4, ஆந்திராவில் 5, கோவாவில் 1 என மொத்தம் 10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களை மூட முடிவெடுத்துள்ளது. இவற்றை மூடினால், ஊழியர்களின் நிலை என்னவாகும் என அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும், கோ-ஆப்டெக்ஸ்ஸில் ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்குத் துணிப்பை கூட தராமல், காகிதத்தில் மடித்துத் தர நிர்வாகம் அறிவுறுத்துகிறது. இப்படியாக வாடிக்கையாளர்கள் கோ-ஆப்டெக்ஸ் கடைகளுக்கு வராமல் இருக்க என்னென்ன வழிகள் உண்டோ அனைத்தையும் கடைபிடிக்க நிர்பந்திக்கப்படுகிறது.
கோ-ஆப்டெக்ஸ் துணிகளுக்கு ஜிஎஸ்டியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். ஈரோட்டில் கைத்தறி துறைக்கு சொந்தமாக உள்ள ரூ.500 கோடி நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.