

சென்னை: தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்திடம் (TIDCO) ரூ.25 கோடி முதலீடு பெற்ற Raptee.HV (ராப்டி.ஹெச்வி) நிறுவனத்தின் புதிய முதன்மை அனுபவ மையத்தை முதல்வர் விஜய் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
இந்த நிறுவனம் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மணப்பாக்கத்தில் செயல்படும் ராப்டி.ஹெச்வி நிறுவனம், மின்சாரக் கார் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாகும்.
டெஸ்லா, விப்ரோ மற்றும் சர்வதேச வாகனத் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழகத்தில் உள்ள எம்ஐடி, குரோம்பேட்டை மற்றும் என்ஐடி, திருச்சி பொறியியல் கல்லூரிகளில் பயின்ற தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்களால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தனது பிரத்யேக ஹெச்வி டெக் (HV-TEC) தொழில்நுட்பத் தளத்தை உருவாக்கியுள்ளது.
இதன்மூலம் உயர் மின்னழுத்தத் தொழில்நுட்பத்தை மின்சார மோட்டார் சைக்கிள்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் T30, இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும்.
இது 240V மின்னழுத்தக் கட்டமைப்பையும், மின்சாரக் கார்களுக்கான CCS2 பொது DC விரைவு மின்னேற்றத் தரநிலையுடன் இணக்கத்தன்மையையும் கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கிடவும், ஏற்கெனவே செயல்பட்டுவந்த தொழிற்சாலை விற்பனை மையத்திலிருந்து மேம்பட்டு, வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிளை முழுமையாக அறிந்து உணரும் வகையில் இப்புதிய அனுபவ மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்கு வாடிக்கையாளர்கள் மோட்டார் சைக்கிளை நேரில் பார்வையிடுவதுடன், அதன் 240V உயர் மின்னழுத்தக் கட்டமைப்பு மற்றும் அதனை இயக்கும் நவீன தொழில்நுட்பங்களைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
மேலும், நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவினருடன் கலந்துரையாடவும், சோதனை ஓட்டம் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளின் செயல்திறன் குறித்த அனுபவத்தை நேரில் பெறுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தின் புதுயுகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் தனது புதிய ஸ்டார்ட் அப் முதலீட்டுக் கொள்கையைப் பயன்படுத்தி, தொடக்கமாக ராப்டி எனர்ஜி பிரைவேட் லிமிடெட் (Raptee Energy Pvt. Ltd.,) நிறுவனத்தில் 25 கோடி ரூபாய் கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமைப் பங்குகள் (Compulsory Convertible Preferential Shares – CCPS) முறையில் முதலீடு செய்துள்ளது. மேலும், Agnikul Cosmos மற்றும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.