

மும்பை: அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை கட்டணம் (எம்டிஆர்) விதிக்கப்படும். இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும். சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்போதும் போல இலவசமாகவே தொடரும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) அறிவித்துள்ளது.
இதுகுறித்து என்பிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடைகளில் பொருட்கள் வாங்குவது, கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணப் பரிமாற்றம் செய்வது எனப் பொதுமக்களுக்கான எந்தவொரு பரிவர்த்தனைக்கும் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது. அதேபோன்று, நண்பர்கள் / உறவினர்களுக்குப் பணம் அனுப்புதல் உள்ளிட்ட தனிநபர்களுக்கு இடையிலான (பி2பி) பணப் பரிமாற்றங்கள், சுய கணக்குப் பரிமாற்றங்கள் ஆகியவை எவ்வித வரம்புமின்றி எப்போதும் போல இலவசமாகவே இருக்கும்.
மேலும், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகள் பயனர்களிடம் ‘பிளாட்பார்ம் கட்டணம்’ எதையும் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.2,000 வரை மேற்கொள்ளப்படும் 95 சதவீதத்துக்கும் அதிகமான அன்றாட சிறு வணிகப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும். ரூ.75,000 மற்றும் அதற்கு மேற்பட்ட பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக ரூ.300 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்த்தகர்கள் இந்த கட்டணத்தை வங்கிகள், யுபிஐ சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும்.
ரயில்வே, தொலைத்தொடர்பு, பெட்ரோல் பங்க், காப்பீட்டு பிரீமியம் மற்றும் மின்சாரம் / நீர் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு (ரூ.2,000-க்கு மேல்) சதவீதத்துக்குப் பதிலாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 மட்டுமே நிலையான கட்டணமாக வசூலிக்கப்படும். மூலதனச் சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு 0.02% (அதிகபட்ச வரம்பு ரூ.300) கட்டணம் பொருந்தும்.
சிறு வணிகர்கள்
மாதம் ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் கட்டணம் பெறும் சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் (பி2பிஎம்) இந்த எம்டிஆர் கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு பெறுகின்றனர். மேலும், கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க பிரத்யேக நிதியம் அமைக்கப்பட உள்ளது.
யுபிஐ உள்கட்டமைப்பைப் பராமரிக்கவும், சைபர் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ஆண்டுக்கு சுமார் ரூ.20,000 கோடி செலவாகிறது. இதற்கான நிதித் தேவையைப் பூர்த்தி செய்யவும், வங்கி மற்றும் நிதிச் சேவை அமைப்புகளின் சேவையை மேலும் வலுப்படுத்தவுமே இந்த வணிக ரீதியிலான கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு என்பிசிஐ தெரிவித்துள்ளது.
ரூ.2,000-க்கும் மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம் மூலம் ஆண்டுக்கு ரூ.16,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ‘ரூபே டெபிட் கார்டு’ பணப் பரிவர்த்தனை, ரூ.2,000 வரையிலான யுபிஐ பணப் பரிவர்த்தனைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செலுத்தும் அல்லது பெறும் நபர்கள் மீது எந்தவொரு வங்கியோ அல்லது அமைப்போ கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.
கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007 பிரிவு 10ஏ-ல் செய்யப்பட்ட திருத்தத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் கதவை, மோடி அரசு அமைதியாகத் திறந்து விட்டுள்ளது. அதன்படி, ரூ.2,000-க்கு
மேற்பட்ட வியாபாரப் பணப் பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் (மெர்ச்சண்ட் டிஸ்கவுன்ட் ரேட்) கட்டணம் விதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களிடம் நேரடியாகக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று அரசு கூறினாலும், வணிகர்கள் மீதான இந்தக் கூடுதல் கட்டணம் இறுதியில் பொருட்கள் விலையேற்றம் மூலம் மக்களின் பையில் இருந்தே எடுக்கப்படும். அமெரிக்காவைச் சேர்ந்த பணப்பரிவர்த்தனை நிறுவனங்களின் கோரிக்கைக்கு மோடி அரசு மீண்டும் பணிந்துவிட்டது. இவ்வாறு ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், “மோடி அரசின் பகல் கொள்ளை இப்போது யுபிஐ பக்கமும் திரும்பியுள்ளது. பொதுமக்களின் எஞ்சிய சேமிப்பையும் அழிக்கும் வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனை வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளனர்” என்றார்.