

சென்னை: சென்னை துறைமுகத்தில் நான்கு புதிய திட்டங்களை, மத்திய கப்பல்துறை செயலர் விஜய்குமார் தொடங்கி வைத்தார்.
சென்னை துறைமுகம், நாட்டின் 3-வது பெரிய துறைமுகமாக இருக்கிறது. இந்த துறைமுகத்தில் 24 கப்பல்கள் நிறுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த துறைமுகத்தில் பல்வேறு புதிய திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் விஜயகுமார் நேற்றுமுன்தினம் சென்னை துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
துறைமுகத்தின் செயல்பாடு மற்றும் நிதி செயல் திறன்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, சென்னை துறைமுகத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் பயணிகள் முனையம், கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு உட்பட ரூ.54.27 கோடி மதிப்பிலான நான்கு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின் போது, சென்னை துறைமுக ஆணையத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.