

புதுடெல்லி: அத்தியாவசியப் பொருட்கள் மீது தேசிய பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்படாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் விவாதத்துக்காக சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி மசோதாவை (2025) அறிமுகப்படுத்தி நிதியமைச்சர் பேசியதாவது: சுகாதாரம், தேசிய பாதுகாப்பு வரி மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்படாது. மாறாக பான் மசாலா போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களின் மீது இந்த வரி விதிக்கப்படும்.
இந்த செஸ் வரியை விதிப்பதன் மூலம் நாட்டில் பான் மாசலா நுகர்வை பெருமளவு தடுக்க முடியும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு. இந்த வரி விதிப்பால் கிடைக்கும் வருவாயிலிருந்து குறிப்பிட்ட சில சுகாதார திட்டங்களின் கீழ் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும். குறிப்பாக, பான் மசாலா மீது விதிக்கப்படும் வருவாயிலிருந்து கிடைக்கும் ஒரு பகுதி சுகாதார விழிப்புணர்வு, பிற சுகாதாரம் தொடர்பான திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
பான்மசாலா போன்ற பொருட்கள் மீது விதிக்கப்படும் 40% ஜிஎஸ்டி தொடரும். அதில் மாற்றம் இல்லை. அதற்கு மேல் இந்த சுகாதார, தேசிய பாதுகாப்பு வரியானது விதிக்கப்படும். பான் மாசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறன் அடிப்படையில் இந்த வரி விதிப்பு இருக்கும். இதன் மூலம், நாட்டின் சுகாதாரம், தேசிய பாதுகாப்புக்கு தேவையான நிதி உறுதி செய்யப்படும்.
பான் மசாலா மீது கலால் வரி விதிக்க முடியாது என்பதால் பான் மசாலா உற்பத்தி ஜிஎஸ்டியுடன் சேர்த்து வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அரசு ஒரு தனி செஸ் வரி மசோதாவை இப்போது கொண்டு வந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.