

புதுடெல்லி: மத்திய அரசு மற்றும் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேச அரசுகள் இணைந்து என்சிஆர்டிசி நிறுவனத்தை உருவாக்கி உள்ளன. இந்த நிறுவனம் சார்பில் நமோ பாரத் விரைவு ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக கடந்த 2023-ம் ஆண்டில் டெல்லி- காஜியாபாத்- மீரட் வழித்தடத்தில் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. அடுத்த கட்டமாக 8 வழித்தடங்களில் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக என்சிஆர்டிசி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உத்தர பிரதேசத்தின் துஹாய் நகரில் நமோ பாரத் ரயில் நிலையம், பணிமனை அமைந்திருக்கிறது. இங்குள்ள பணிமனையில் நமோ பாரத் மாதிரி ரயில் பெட்டி நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ரயில் பெட்டியில் பிறந்த நாள், முக்கிய விழாக்கள், திருமண புகைப்பட படிப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கப்படும்.
மேலும் ஓடும் நமோ பாரத் ரயிலிலும் விழாக்களை நடத்தலாம். இதற்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5,000 கட்டணம் வசூலிக்கப்படும். பொதுமக்கள் விரும்பிய வகையில் ரயில் பெட்டியை அலங்கரித்து கொள்ளலாம். விரைவில் திரைப்பட படிப்பிடிப்பு நடத்தவும் அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.