

புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் செமி கண்டக்டர் பிரிவானது, தனது சிப் விற்பனை மூலம் 49 மடங்கு கூடுதல் வருவாயை கடந்த காலாண்டில் ஈட்டியுள்ளது.
இதன் மூலம் நிறுவன ஊழியர்களுக்கு தலா ரூ.3.25 கோடி போனஸ் வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, ஒப்பந்தத்தில் நிறுவன உயர் அதிகாரிகளும், தொழிலாளர் யூனியன் நிர்வாகிகளும் கையெழுத்திட்டு உள்ளனர். முன்னதாக ஊழியர்களுக்கு நியாயமான போனஸை வழங்காவிட்டால், 18 நாள் ஸ்டிரைக் நடத்துவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் உலக நாடுகளுக்கு சிப் ஏற்றுமதி பாதிக்கும் என்பதால் நிறுவனம் போனஸ் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த போனஸை வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதால் உலகின் மிகப்பெரிய ஆலைகளில் ஒன்றில் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்க இருந்தது தடுக்கப்பட்டுள்ளது.
சாம்சங் செமி கண்டக்டர் ஆலையிலுள்ள 78 ஆயிரம் ஊழியர்கள் இந்த போனஸை பெறவுள்ளனர். இது ஊழியர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய போனஸ் தொகையாகப் பார்க்கப்படுகிறது. 2026-ம் ஆண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தைக் கணக்கில் கொண்டு இந்தத் தொகை வழங்கப்படவுள்ளது.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம், ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சார வாகனங்கள், சாட்ஜிபிடி போன்ற சேவைகளை இயக்கும் ஏஐ தரவு மைய சர்வர்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படும் மெமரி சிப்களை தயாரித்து வழங்கி வரும் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய மாதங்களில் மெமரி சிப்பற்றாக்குறையின் காரணமாக நிறுவனம் ஏற்கனவே விலையை கடுமையாக உயர்த்தியிருந்தது.