

புதுடெல்லி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஏர்டிரங்க் என்ற ஏஐ நிறுவனம் இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடியை முதலீடு செய்கிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை தலைமையிடமாகக் கொண்டு ஏர்டிரங்க் நிறுவனம் செயல்படுகிறது. இது, ஆசியா, பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனம் ஆகும். வங்கதேச வம்சாவளியை சேர்ந்த ராபின் குதா 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஏர்டிரங்க் நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் உட்பட பல்வேறு நாடுகளில் அந்த நிறுவனத்தின்கிளைகள் செயல்படுகின்றன.
இந்தியாவில் மும்பை, சென்னை, ஹைதராபாத் நகரங்களில் ஏர்டிரங்க் நிறுவனத்தின் மிகப்பெரிய டேட்டா சென்டர்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவன தலைவர் ராபின் குதா டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ரூ.3 லட்சம் கோடியை ஏர்டிரங்க் முதலீடு செய்யும் என்று அறிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘ஏர்டிரங்க் நிறுவனத்தின் முதலீடு இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் மிகப்பெரியது. கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் உலகின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. ஏர் டிரங்க் நிறுவன முதலீட்டால் இந்த துறையில் இந்தியா மேலும் வேகமாக முன்னேறிச் செல்லும். நாட்டில் வேலைவாய்ப்புகள் கணிசமாக பெருகும்’’ என்று கூறியுள்ளார்.