

புதுடெல்லி: கடந்த நிதியாண்டில் ஆயுத ஏற்றுமதி ரூ.38,424 கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று கூறியுள்ளதாவது: "2025- 26ம் நிதியாண்டில் நமது நாட்டில் இருந்து ரூ.38,424 கோடி மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 62 சதவீதம் அதிகமாகும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்புத் தளவாடங்களுக்கு உலக நாடுகளிடையே பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் நமது நாட்டில் இருந்து பாதுகாப்புக் கருவிகள் ஏற்றுமதியும் முன்பை விட அதிகரித்துள்ளது. பாதுகாப்புத் தளவாட பிரிவில் ரூ.38,424 கோடி அளவுக்கு இதுவரை ஏற்றுமதியே நடந்ததில்லை. இது ஒரு மைல்கல் சாதனையாகும்.
முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் ரூ.14,802 கோடி கூடுதலாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் 54.84 சதவீதம் பொதுத்துறை பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்தும், 45.15 சதவீதம் தனியார் நிறுவனங்களில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுத் துறை -தனியார் கூட்டு மற்றும் தற்சார்புடைய பாதுகாப்புச் சூழலமைப்பின் வல்லமையை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.