

புதுடெல்லி: தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முடிவுகளை இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் நாளை அறிவிக்கவுள்ளன. இருதரப்பு பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை 2007-ம் ஆண்டு தொடங்கியது. 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்தியா இதுவரை கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் இது முதன்மையானது என மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையின் முடிவு இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்படவுள்ளது.
ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டனியோ காஸ்டா மற்றும் உர்சுலா வான் டெர் ஆகியோர் உச்சிமாநாடு தொடர்பாக பிரதமர் மோடியுடன் நாளை பேசவுள்ளனர். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தை முடிவுகளை இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இந்த வாரம் அறிவிக்கும். அதன்பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
இந்த ஒப்பந்தத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றம், இந்தியாவில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தேவை. இதை அமல்படுத்த சில காலம் ஆகும்.
இந்த ஒப்பந்தம் மூலம் இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் இறக்குமதி வரியை 90 சதவீதத்துக்கு மேல் குறைக்கும். ஜவுளி மற்றும் காலணி தயாரிப்பு துறையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமலானவுடனே வரிகள் உடனடியாக குறைந்து விடும். சில பொருட்களுக்கு படிப்படியாக வரிகள் குறைக்கப்படும்.
தொலைதொடர்பு, போக்குவரத்து, ஆடிட்டிங் போன்ற துறைகளின் சேவைகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்க விதிமுறைகளை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நீக்கும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தே.ஜ கூட்டணி அரசு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஓமன், நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், மொரீசியஸ் உட்பட 7 ஒப்பந்தங்களை தே.ஜ கூட்டணி அரசு இறுதி செய்துள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் 27 வளர்ந்த நாடுகள் உள்ளதால், இந்தியா செய்து கொள்ளும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மிகப் பெரியதாக இருக்கும். சிறு விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், பால் பொருட்களை இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சேர்க்கவில்லை.
அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக உலகளவில் வர்த்தகம் தடைபட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாகும். தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம், சீனாவை சார்ந்திருப்பதையும் குறைக்க உதவும்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே 2024-25-ம் ஆண்டில் நடைபெற்ற இருதரப்பு வர்த்தகம் 136.53 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ1.25 லட்சம் கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.