

சென்னை: மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர் வழித் துறை அமைச்சகத்தின் செயலர் விஜய்குமார், நேற்று முன்தினம் சென்னை துறைமுகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.
இதையடுத்து நடந்த கூட்டத்தில் கப்பல் நிறுவனங்கள், சரக்கு ரயில் இயக்குநர்கள், முனைய இயக்குநர்கள் மற்றும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதில், துறைமுகத்தில் சரக்கு போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் நோக்கில் சென்னை துறைமுகத்துக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே 3 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதன்படி, கன்டெய்னர் அல்லாத சரக்குகளுக்கான ஊக்கத் திட்டத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளில் 10 லட்சம் டன் உலர் சரக்குகளை கையாளுவதற்காக ‘மின்சோட்ரான்ஸ்’ நிறுவனத்துடனும், தாய்லாந்தின் ரானாங் துறைமுகம் - சென்னை துறைமுகம் இடையே சரக்கு பெட்டக கப்பல் சேவையை தொடங்குவதற்காக ‘டிசிஐ சீவேஸ்’ நிறுவனத்துடனும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மூன்றாவதாக துறைமுகம் வழியாக ரயில் மூலம் சரக்கு பெட்டகங்களை கொண்டு செல்வதை ஊக்குவிக்க மத்திய சேமிப்புக் கிடங்கு கழகத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிகழ்வில் சென்னை துறைமுகத்தின் தலைவர் சச்சின் எஸ்.குர்வே, துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன், காமராஜர் துறைமுக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜே.பி.ஐரீன் சிந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.