பிப்.1 முதல் கூடுதல் கலால், செஸ் வரி அமல்: சிகரெட், பான் மசாலா விலை உயரும்

பங்கு விலை வீழ்ச்சியால் ஐடிசி-க்கு ரூ.50,000 கோடி இழப்பு
பிப்.1 முதல் கூடுதல் கலால், செஸ் வரி அமல்: சிகரெட், பான் மசாலா விலை உயரும்
Updated on
2 min read

புதுடெல்லி: சிகரெட், பான் மசாலா மீது விதிக்கப்பட்ட கூடுதல் கலால், செஸ்வரி பிப்ரவரி 1-ம் தேதி அமலுக்குவருகிறது. இதன் காரணமாக அவற்றின் விலை கணிசமாக உயர உள்ளது. கூடுதல் வரி விதிப்பின் எதிர்வினையாக சிகரெட் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் நேற்று வீழ்ச்சி அடைந்தன. ஐடிசி நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி இழப்பு ஏற் பட்டது.

சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க ஏதுவாக ‘மத்திய கலால் திருத்த சட்டமசோதா 2025’ நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதேபோல புகையிலை பொருட்கள் மீது புதிய செஸ் வரிவிதிக்க ஏதுவாக, ‘சுகாதார மற்றும் தேசிய பாதுகாப்புசெஸ் மசோதா 2025’ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இரு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இதைத் தொடர்ந்து, புகையிலை, வாசனை புகையிலை, குட்கா பேக்கிங் இயந்திரங்கள் விதிகள் 2026 என்ற அரசாணையை மத்திய நிதியமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இந்த புதிய விதிகள் மற்றும் சிகரெட், பான் மசாலா தொடர்பான வரி விகிதங்கள் பிப். 1-ம்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்காரணமாக சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான விலை கணிசமாக உயர உள்ளது.

இதுதொடர்பாக தொழில்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது 40% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு உள்ளது. அவற்றின் மீது கூடுதலாக கலால், செஸ் வரியும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சிகரெட் விலை கணிசமாக உயரும். தற்போது 1,000 சிகரெட்டுகளுக்கு அவற்றின் அளவுக்கு ஏற்ப ரூ.200 முதல் ரூ.735 வரை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. புதிய வரிவிதிப்பு நடைமுறையின்போது 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை வரி வசூலிக்கப்பட உள்ளது. இதன்காரணமாக சிகரெட் விலை 30 சதவீதம் வரை உயரக்கூடும். இதேபோல பான் மசாலா விலையும் 30 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும்.

சிகரெட், பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பல்வேறு மோசடிகளில் ஈடுபடுகின்றன. குறிப்பாக உற்பத்தி அளவை குறைத்து காட்டி வரிஏய்ப்பில் ஈடுபடுகின்றன. இதை தடுக்க கடந்த 31-ம் தேதி மத்திய அரசு விரிவான அரசாணையை வெளியிட்டு உள்ளது. இதன்படி புகையிலை சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள், தங்களிடம் இருக்கும் இயந்திரங்கள் குறித்த தணிக்கை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் புகையிலை பொருட்கள் பேக்கிங் செய்யப்படும் இடங்களில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதன்மூலம் சிகரெட், பான்மசாலா நிறுவனங்களின் உற்பத்தி திறன் மற்றும் எவ்வளவு புகையிலை பொருட்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன என்பன உள்ளிட்ட விவரங்களை துல்லியமாக அறிய முடியும். இவ்வாறு தொழில் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பங்குகள் விலை வீழ்ச்சி: கூடுதல் வரி விதிப்பின் எதிர்வினையாக சிகரெட், பான்மசாலா தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகள் நேற்று கடும் வீழ்ச்சி அடைந்தன. சிகரெட் விற்பனையில் முன்னணியில் இருக்கும் ஐடிசி நிறுவன பங்குகள் 10 சதவீதம் வரை சரிந்தன. ஐடிசி நிறுவனத்துக்கு மட்டும் நேற்று

ரூ.50,000 கோடி இழப்பு ஏற்பட்டது. இதேபோல மற்றொரு முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான காட்பிரே பிலிப்ஸ் இந்தியாவின் பங்குகள் 19 சதவீதம் அளவுக்கு சரிந்தன. விஎஸ்டி நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வரை சரிந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in