Published : 01 Jun 2023 04:44 PM
Last Updated : 01 Jun 2023 04:44 PM

வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு மெமோ? - டிசிஎஸ் நிறுவனம் விளக்கம்

வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு பணி விதிகளை பின்பற்றாத காரணத்துக்காக மெமோ வழங்கப்பட்டதாக டிசிஎஸ் நிறுவனம் பற்றி பேச்சுக்கள் பரபரப்பான நிலையில் அது தொடர்பாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்த நடைமுறை தான் ’ஒர்க் ஃபரம் ஹோம்’. ஐடி துறையில் இது பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நடைமுறையின்படி வீட்டிலிருந்து பணி புரியத் தொடங்கிய பல்வேறு நிறுவனங்களின் லட்சக்கணக்கான ஊழியர்கள் பலர் இன்னமும் அதைத் தொடர்ந்து வருகின்றனர். நிறுவனங்களும் இதை ஊக்குவிக்கின்றன.

இந்நிலையில், நீண்ட காலமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் முறையில் பணிபுரிந்து வந்த டிசிஎஸ் ஊழியர்கள் சிலர் அதன் சலுகைகளை அத்துமீறியதால் அவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நிறுவனம் சார்பில் மெமோ அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது, டிசிஎஸ் விதித்த நடத்தை விதிமுறைகளைக் கடைபிடிக்காத ஒர்க் ஃபர்ம் ஹோம் ஊழியர்கள் இனி வாரத்தில் 3 நாட்கள் வீதம் மாதத்தில் 12 நாட்களுக்கு அலுவலகம் வர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், டிசிஎஸ் நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. டிசிஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள் ஓர் உற்சாகமான பணியிட சூழலை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் பணியிடங்கள் ஊழியர்களின் ஆற்றலால் நிறைந்திருக்க விரும்புகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் டிசிஎஸ் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவில் ஊழியர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு டிசிஎஸ் நிறுவன சூழல் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மேலும், அவர்கள் டிசிஎஸ் நிறுவனத்திற்கு நேரில் வந்து புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். பணியிடத்திற்கான மகிழ்வான தருணங்களை அனுபவிக்க வேண்டும். அதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்துடன் நாமும் ஒரு பகுதியாக ஒன்றிணைந்துவிட்டோம் என்ற உணர்வை அவர்கள் பெற வேண்டும்.

அதனால், கடந்த சில மாதங்களாக நாங்கள் இந்தியாவில் உள்ள ஊழியர்களை வாரம் மூன்று நாட்களாவது நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணி புரிய ஊக்குவிக்கிறோம். இது நல்ல பலனைக் கொடுக்கிறது. நிறைய பேர் விரும்பி அலுவலகம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதை புதிய ஊழியர்கள் மட்டுமல்லாமல் வீட்டிலிருந்து பணி புரியும் அனைத்து ஊழியர்களுக்கும் நீட்டிப்பதே எங்களின் இலக்கு" என்று கூறியுள்ளார். இதனால் டிசிஎஸ் மெமோ சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x