

ராணிப்பேட்டை: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் ஹன்ஸ்ராஜ் வர்மா தெரிவித்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கென தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிஐஐசி) மற்றும் ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்துடன் (யூஎன்ஐடிஓ) இணைந்து, தமிழகத்தில் உள்ளடங்கிய மற்றும் நிலையான தொழில் வளர்ச்சிக்கான சிறந்த நடைமுறைகள் மற்றும் நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் வளர்மதி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமை தாங்கி பேசும் போது, " தமிழகத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் துறை சார்ந்த தோல் தொழிற்சாலை, அரிசி ஆலை, ஆட்டோமொபைல், காகித ஆலை, பால் உற்பத்தி உட்பட பல்வேறு நிறுவனங்களுக்கு சிறப்பாக ஒத்துழைப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வழங்கி வருகிறது.
தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பது மட்டுமின்றி அவர்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு உதவி களை செய்து வருகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முதுகெலும்பாக இருந்து வருகிறது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் சுற்றுச்சூழல், சமூக நிர்வாகம் மற்றும் தொழில்துறை புரட்சி 4.0 நோக்கி பயணித்து வருகிறது. நிறுவனங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப உற்பத்தி செயல்முறை தரத்தை மேம்படுத்தி, தரமான பொருட்களை தயாரித்து, விற்பனை செய்திடவும், தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையவும் தேவையான பயிற்சிகள் இந்த கூட்டத்தின் மூலமாக நடத்தப் படுகிறது. இதை தொழில் நிறு வனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.
நிகழ்ச்சியில், தொழில் மற்றும் வர்த்தக துறையின் சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி காணொலி காட்சி மூலமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்கான வழிகாட்டுதலை வழங்கினார். இதில், யூஎன்ஐடிஓ பிரதிநிதி மற்றும் இந்தியாவின் பிராந்திய அலுவலகத்தின் தலைவர் ரெனேவான் பெர்க்கல், தோல் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாக இயக்குநர் செல்வம், தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் (யூஎன்ஐடிஓ)தேபாஜிட் தாஸ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக வேலூர் மண்டல கிளை மேலாளர் கவுரி உட்பட பலரும் பங்கேற்றனர். தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பது மட்டுமின்றி அவர்களின் வளர்ச்சிக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.