

கிருஷ்ணகிரி: பட்டியலின மற்றும் பழங்குடியினரைத் தொழில் முனை வோராக்க, ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்-பிசினஸ் சாம்பியன்ஸ்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு செயல்படுத்தி வரும் தொழில் முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோரின் பங்கு குறைவாக உள்ளது.
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினரைத் தொழில்முனை வோராக்க பிரத்யேக சிறப்புத் திட்டமாக, ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்-பிசினஸ் சாம்பியன்ஸ்’ திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப் படும்.
இத்திட்டத்தில் மொத்த தொகையில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். மானிய உச்ச வரம்பு ரூ.1.5 கோடி. இதே போல், கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற திட்ட அறிக்கை, உரிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்கள் அறிய, ‘பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி 635001’ என்கிற முகவரியில் நேரடியாகவோ அல்லது 04343 - 235567 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.