

ஓசூர்: ஓசூரில் மகசூல் அதிகரிப்பால் முட்டைகோஸ் விலை சரிந்துள்ளது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஓசூர் சுற்று வட்டாரப் பகுதியில் குறுகிய காலத்தில் விளையும் காய்கறி பயிர்களை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறிப்பாக கெலமங்கலம், தேன்கனிக் கோட்டை, தளி, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர்.
இங்கு அறுவடையாகும் முட்டைகோஸ் தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளாவுக்கும் அதிகளவில் விற்பனைக்குச் செல்கிறது. கடந்தாண்டு 50 கிலோ முட்டைகோஸ் மூட்டை ரூ.900 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது. நடப்பாண்டு, மகசூல் அதிகரிப்பால் சந்தைக்கு வரத்து அதிகரித்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.400-க்கு விற்பனையானது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேலும் விலை குறைந்து ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ.200-க்கு விற்பனையாகிறது. இதனால், அறுவடை கூலி, போக்குவரத்துச் செலவுக்குக் கூட வருவாய் கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: வழக்கமாக குளிர் காலங்களில் முட்டைகோஸ் விலை குறையும். கோடை காலங்களில் விலை உயரும். கோடை விற்பனையை மையமாகக் கொண்டு ஒரு ஏக்கருக்கு ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்தோம். ஆனால், நடப்பாண்டு பரவலாகப் பெய்த மழையால் மகசூல் அதிகரித்தது. இதனால் சில மாதங்களாக உரிய விலை கிடைக்கவில்லை.
ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.4-க்கு வியாபாரிகள் கொள் முதல் செய்கின்றனர். மேலும், வெளிமாநில சந்தைகளில் விற்பனையின்றி தேக்கம் அடைந்துள்ளது. இதனால், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.