

கோவை: சொந்த ஊர் சென்ற வட மாநில தொழிலாளர்களில் 30 சதவீதம் பேர் கோவை திரும்பாததால் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தொழில்துறையினர், அவர்களை விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
தொழில் நகரான கோவை மாவட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவைத் துறையின்கீழ் செயல்படும் பல்வேறு தொழில் நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆண்டுதோறும் ஹோலி பண்டிகைக்கு பெரும்பாலான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பண்டிகை முடிந்த பின் அறுவடை கால பணிகள் உள்ளிட்டவற்றை நிறைவு செய்து மீண்டும் கோவைக்கு திரும்புவார்கள்.
இந்தாண்டு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வதந்தி காரணமாக, வழக்கத்தை விட கூடுதலான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இவர்களில் பலர் திரும்பாததால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் நிலைமையை சமாளிக்க விமானம் மூலம் தொழிலாளர்களை கோவைக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் தொழில்துறையினர் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழ்நாடு குறு, சிறு தொழில் அமைப்புகளின் சங்கமான (டான்சியா) துணைத் தலைவர் சுருளிவேல் கூறும்போது, ‘‘இந்தாண்டு சொந்த ஊர் சென்றவர்களில் 30 சதவீதம் பேர் கோவைக்கு திரும்பவில்லை. ஏற்கெனவே மூலப்பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறையினர் கிடைக்கும் பணி ஆணைகளை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் வட மாநில தொழிலாளர்களை தங்களின் சொந்த செலவில் விமானம் மூலம் கோவைக்கு அழைத்து வரும் முயற்சியை தொடங்கியுள்ளனர்’’ என்றார்.
கோவை ‘சிட்கோ’ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் (கொசிமா) தலைவர் நல்லதம்பி கூறும்போது, “வட மாநில தொழிலாளர்கள் கோவை திரும்பாததால் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனது தொழில் நிறுவனத்தில் பணியாற்றியவர்களில் ஒருவர் கூட இதுவரை திரும்பவில்லை. தொழிலாளர்களே இல்லாமல் பணி ஆணைகளை எவ்வாறு எடுப்பது? எனவே, நிலைமையை எதிர்கொள்ள எனது நிறுவன ஊழியரை விமானத்தில் அனுப்பி வட மாநில தொழிலாளர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் பேசி அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன். இங்கிருந்து சென்றவர்கள் யாரும் திரும்ப தயாராக இல்லை. புதிதாக தொழிலாளர்களை அழைத்து வர விமான டிக்கெட், சிறப்பு சலுகைகள் உள்ளிட்டவற்றை தெரிவித்து அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
கோரக்பூரில் இருந்து ஒரு தொழிலாளியை கோவைக்கு அழைத்து வர ரூ.14,800 (வருவதற்கு மட்டும்) செலவிட வேண்டியுள்ளது. நான் மட்டுமல்ல பல்வேறு தொழில் நிறுவனங்கள் வட மாநில தொழிலாளர்களை விமானம் மூலம் அழைத்து வரும் நடவடிக்கையை தொடங்கியுள்ளன” என்றார்.