மேட்டூரிலிருந்து கேரளாவுக்கு 15 லட்சம் மீன் குஞ்சுகள் அனுப்பி வைப்பு

மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் இருந்து கேரளாவுக்கு நுண் மீன் குஞ்சுகளை அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் இருந்து கேரளாவுக்கு நுண் மீன் குஞ்சுகளை அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூரிலிருந்து கேரளாவுக்கு 15 லட்சம் மீன் குஞ்சுகள் அனுப்பி வைக்கப்பட்டன, என மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூரில் செயல்பட்டு வரும் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில், கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்களின் வளத்தை பெருக்கும் வகையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் ஜூலை தொடங்கி, அடுத்த ஆண்டு ஜூன் வரை சீரான இடைவெளியில் மேட்டூர் அணையில் விடப்படுகின்றன.

அதேபோல, ஒவ்வொரு மாவட்டத்தின் மீன் வளத்துறைக்கும், அண்டை மாநிலத்துக்கும் மீன் குஞ்சுகள் வழங்கப்படுகின்றன. தற்போது, மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை உள்ளிட்ட மீன்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இன முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்யும். அப்போது, மீன் குஞ்சுகளை கண்டறிந்து சேகரித்து வழங்குவதில் சிக்கல் உள்ளது. இதனால் தூண்டுதல் முறையில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தாய், தந்தை மீன்களை வளர்த்து ஊசி முலம் ஹார்மோன் செலுத்தப்படுகிறது.

பின்னர், 4-வது நாளில் நுண் மீன் குஞ்சுகள் சேகரிக்கப்பட்டு, 1 மாதத்துக்கு விரலிகளாக வளர்க்கப்படுகின்றன. 15 முதல் 17 நாட்களில் இள மீன் குஞ்சுகளாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கேரளாவில் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய தேவையான வசதிகள், இடங்கள் இல்லாததால் மேட்டூர் அரசு மீன் குஞ்சு உற்பத்தி, வளர்ப்புப் பண்ணையில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட இடைவெளியில் வாங்கிச் செல்கின்றனர். அதன்படி, 15 லட்சம் எண்ணிக்கையில் கட்லா, ரோகு, மிர்கால் நுண்மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வேலூர் மாவட்டத்துக்கு 6 லட்சம் நுண் மீன் குஞ்சுகள், 1.52 லட்சம் இள மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்து அனுப்பி வைக்கப்பட்டன, என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in