

சிமென்ட் மீதான விலையை ஆலைகள் திடீரென உயர்த்தியுள்ளதைக் கண்டித்து கட்டுமான நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரெடாய் புகார் பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. நிறுவனங்களிடையிலான போட்டியை உறுதி செய்யும் ஆணையத்தின் (சிசிஐ) முன்பு தனது புகாரை கிரெடாய் பதிவு செய்ய உள்ளது.
சிமென்ட் விலையை நிறுவனங்கள் திடீரென உயர்த்தியதால் ரியல் எஸ்டேட் தொழிலில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே தேக்க நிலையைச் சந்தித்து வரும் இத்துறையில் இந்த திடீர் விலையேற்றம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கிரெடாய் அமைப்பின் தலைவர் லலித் குமார் ஜெயின் தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் ரூ. 120 ஆக இருந்த சிமென்ட் மூட்டை விலை இப்போது ரூ. 320 வரை உயர்ந்துள்ளது. பொதுவாக மழைக் காலங்களில் கட்டுமானப் பணிகள் அவ்வளவாக நடைபெறாது. புதிய பணிகளும் இந்த சமயத்தில் தொடங்கப்படமாட்டாது. இந்த சமயத்தில் சிமென்ட் விலை குறைவாக இருக்கும்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக இப்போது விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு எவ்வித காரணமும் இல்லை. இது நியாயமற்ற விலை உயர்வு என்றும் ஜெயின் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே கட்டுமானத்துக்குத் தேவைப்படும் மூலப் பொருள்களான இரும்புக் கம்பி, செங்கல், மணல், ஜல்லி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான கூலியும் அதிகரித்துள்ளது.
இவை காரணமாக வீடுகளின் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சிமென்ட் விலை திடீரென உயர்த்தப்பட்டது நியாயமற்ற செயல். கட்டுமான செலவு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஒப்புக் கொண்ட விலையில் வாடிக்கையாளர்களுக்கு வீடுளை அளிப்பது மிகவும் கடினமான விஷயம் என்றும் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.
இரும்புக் கம்பி விலை டன்னுக்கு ரூ. 47 ஆயிரத்திலிருந்து ரூ. 52 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர்களின் கூலி 20 சதவீதம் உயர்ந்துள்ளது. மின்சாதனப் பொருள்கள், மரங்கள், குளியலறை பொருள்களின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்றும் ஜெயின் குறிப்பிட்டுள்ளார்.