

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5% தாண்டும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை காணப்படுகின்ற போதிலும், இந்தியாவில் தொழில் செயல்பாடுகள் ஆரோக்கியமாக உள்ளன. இதனால், சர்வதேச நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியதையடுத்து சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடைந்தது. இதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டி விகித்தை அதிகரித்து வருகின்றன. இந்தச் சூழலில் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவின் பொருளாதாரம் மேம்பட்ட நிலையில் இருப்பதாக சர்வதேச செலாவணி நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் கூறும்போது, ‘‘நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும்.
இந்தியாவில் மக்களிடையே கடன் தேவை அதிகரித்து இருக்கிறது. இது தொழில் செயல்பாடுகள் ஆரோக்கியமான நிலையில் இருப்பதற்கான அறிகுறி. சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார நெருக்கடியால் இந்தியா பெரியஅளவில் பாதிப்பை எதிர்கொள்ளவில்லை. சவாலாக இருந்த பணவீக்கம் தற்போதுகட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியா நடப்பு நிதி ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டும்” என்றார்.