

சென்னை: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்) கடந்த மார்ச்31-ம் தேதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வட்டி, வரிகள், தேய்மானம், மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய், வரிக்கு முந்தைய லாபம், வரிக்கு பிந்தைய லாபம் ஆகியவற்றில் நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திஉள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎல் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2023 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.5,225.41 கோடியாக உள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.4,069.04 கோடியாக இருந்தது. இது 28 சதவீத வளர்ச்சியாகும்.
கடந்த ஆண்டில் நிறுவனத்தின் வட்டி, வரிகள், தேய்மானம், மற்றும் கடனடைப்புக்கு முந்தைய வருவாய் ரூ.407.12 கோடியிலிருந்து 157 சதவீதம் அதிகரித்து தற்போது ரூ.1,048.02 கோடியாக உள்ளது. நிறுவனத்தின் வரிக்கு முந்தைய லாபம் ரூ.22.02 கோடியிலிருந்து ரூ.602.76 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.14.32 கோடியிலிருந்து தற்போது ரூ.387.87 கோடியாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. டிஎன்பிஎல் நிறுவனம் மார்ச் 31-ம்தேதியுடன் முடிவடைந்த 4-வது காலாண்டிலும் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
2022-23 நிதியாண்டில் நிறுவனத்தின் காகித உற்பத்தி 4,20,793 மெட்ரிக் டன். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் 3,88,881 மெ.டன்னாக இருந்தது. காகிதத்தின் மொத்த விற்பனை 4,20,793 மெ. டன்னாக இருந்தது, 31.03.2023 அன்று நிறுவனம் காகிதத்தின் பூஜ்ஜிய இருப்பை பதிவு செய்துள்ளது.
2022-23 நிதியாண்டில் காகித அட்டை உற்பத்தி 1,83,770 மெ.டன். கடந்த ஆண்டில் இது 1,68,035 மெ.டன்னாக இருந்தது. இயக்குநர் குழு 2022-23-ம்ஆண்டுக்கு ரூ.5 (ஒரு பங்குக்கு) ஈவுத்தொகை வழங்கப் பரிந்துரைத்துள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.