

கலிபோர்னியா: ஃபேஸ்புக் தளத்தின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் ஊழியர்களை பணி நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை சுமார் 10,000 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்க மெட்டா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதில் இந்தியாவில் பணியாற்றி வரும் ஊழியர்களும் அடக்கம்.
கரோனா பரவலுக்கு பின்னதாக தொழில்நுட்ப உலகின் முன்னணி நிறுவனங்கள் பல தங்கள் ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கி வருகிறது. அதுவும் பெரிய எண்ணிக்கையில் இந்த பணி நீக்கம் நடைபெற்று வருகிறது. ட்விட்டர், மெட்டா, மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.
மார்க்கெட்டிங், சைட் செக்யூரிட்டி, என்டர்பிரைஸ் இன்ஜினியரிங், புரோகிராம் மேனேஜ்மென்ட், கன்டென்ட் ஸ்ட்ரேட்டிஜி மற்றும் கார்ப்பரேட் தகவல் தொடர்பு என பல்வேறு குழுக்களில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் தற்போது மெட்டாவில் பணி நீக்க நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து ஊழியர்கள் தங்கள் வருத்தத்தை லிங்க்ட் இன் தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது மெட்டா. கடந்த 2020-ல் அதிகளவில் ஊழியர்களை பணி அமத்தியது அந்நிறுவனம். பின்னர் அதை குறைக்கும் வகையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஒருபுறம் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வந்தாலும் மெட்டாவின் பங்குகள் உயர்ந்து வருவதாக தெரிகிறது. அதன் பலனாக ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் டாப் 10-ல் மார்க் ஸூகர்பெர்க் மீண்டும் இணைந்துள்ளார். ஊழியர்களை இரண்டாவது முறையாக பணி நீக்கும் நடவடிக்கையை மெட்டா மேற்கொண்டு வருகிறது. இது மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறும் என ஸூகர்பெர்க் தெரிவித்திருந்தார். தற்போது 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இந்த நடவடிக்கை அதன் மூன்றாவது மற்றும் கடைசி கட்டம் என தெரிகிறது. பணவீக்கம் மற்றும் டிஜிட்டல் வழி விளம்பரங்களில் ஏற்பட்டுள்ள சரிவு இதற்கு காரணம் என மெட்டா தெரிவித்துள்ளது.