

சென்னை: சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான எம்.வி.ராவ் தலைமையில் டிடிகே சாலையில் உள்ள மியூசிக்அகாடமியில், சென்னைமண்டல அலுவலர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சென்னை வட்டாரத்தைச் சேர்ந்த கிளை ஊழியர்கள், தலைவர்கள் பங்கேற்று பல்வேறு பிரச்சினைகள், வணிக நடை முறைகள் குறித்த விவாதங்களில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் எம்.வி.ராவ் பேசியதாவது: 2022-23-ம்நிதியாண்டில் வங்கி சிறப்பாக முன்னேற்றம் அடைந்து ரூ.1,582 கோடி லாபம் ஈட்டியுள்ளது. மேலும் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு செயல்பாடுகளில் முன்னேற்றம் கண்டு, அதிக சந்தை பங்கைக் கைப்பற்றி வலுவான நிலையில் உள்ளது.
வரும் காலங்களில் குறைந்த வருமானம் கொண்டவர்கள், தினக்கூலிகள் மற்றும் சமூகத்தின் கீழ்நிலைப் பிரிவினரை உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டும் வகையில் அதிக அரசு காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் ஓய்வூதியத் திட் டங்களைத் தொடங்க வேண்டியது அவசியம்.
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா மின்னணுமயமாக்கலில் உறுதியாக உள்ளது. இதன் முன் மற்றும் பின்தள செயல்பாடுகள் மின்னணுமயமாக்கப்படும். ஐஐஎம், ஐஐடி மாணவர்களுக்குக் கல்விக் கடன் கொடுக்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல வணிகத் துறை மற்றும் குறு சிறுநடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதிகளை வங்கி அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார். சென்னை மண்டல தலைவர் அரவிந்த்குமார், பிராந்திய தலைவர் சந்தோஷ் வஸ்தவ் ஆகி யோர் உடனிருந்தனர்.