

கோவை: நிதி நெருக்கடியால் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு நூற்பாலைகளில் 50 சதவீத உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய சிறு நூற்பாலைகள் சங்க (சிஸ்பா) கவுரவ செயலாளர் ஜெகதீஷ் சந்திரன், மறுசுழற்சி ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் (ஆர்டிஎப்) தலைவர் ஜெயபால், தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி, இந்திய நூற்பாலைகள் சங்கத்தின்(இஸ்மா) தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. உலக பொருளாதார மந்தநிலை காரணமாக நூல் மற்றும் துணி வகைகளின் ஏற்றுமதி குறைந்துள்ளது. உள்நாட்டு சந்தையில் ஏற்றுமதி தரம் வாய்ந்த நூல் விற்பனை செய்யப்படுவதால் சிறு நூற்பாலைகள் நஷ்டத்துக்கு நூலை விற்பனை செய்து வருகின்றனர்.
சீனா, வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நூல் மற்றும் துணி வகைகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஒரு கிலோ நூல் விற்பனையில் ரூ.20 முதல் ரூ.25 நஷ்டத்தை சிறு நூற்பாலைகள் எதிர்கொண்டுள்ளன. இந்நிலை நீடித்தால் பல நூற்பாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்படும். நிதி நெருக்கடியால் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு நூற்பாலைகளில் 50 சதவீத உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உயர்த்தப்பட்ட வங்கி வட்டி விகிதங்களை உடனடியாக பழைய நிலைக்கே (7.75 சதவீதம்) குறைத்து வழங்க வேண்டும். குறுகிய கால கடன் திட்டத்தில் நிலுவை தொகையை மறுசீரமைத்து இக்கடனை ஏற்கெனவே வழங்கியதுபோல் முழுவதுமாக மீண்டும் புதிய கடனாக வழங்க வேண்டும். இக்கடனுக்கு விடுமுறை காலமாக 6 மாதமும், கடனை திருப்பி செலுத்த 7 ஆண்டுகளும் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.
தற்போது உள்ள காலக்கடனை மறுசீரமைத்து 2 ஆண்டுகள் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். நூல் மற்றும் துணி வகைகள் ஏற்றுமதியை மத்திய அரசு ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நூலின் அளவை கண்காணித்து தடுக்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது மின்சாரத்துக்கு அதிகபட்ச தேவை கட்டணம் 90 சதவீதம் வசூலிக்கிறது. நூற்பாலைகளின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பயன்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப அதிகபட்ச தேவை கட்டணத்தை வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும் உத்தேசித்துள்ள 5.6 சதவீத மின்கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.
பசுமை எரிசக்தியை ஊக்குவித்து அவற்றுக்கு மூலதன மானியம் 15 சதவீதம் வழங்க வேண்டும். நிலை கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது. பழையபடி ரூ.35 மட்டும் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.