

புதுடெல்லி: பொதுத் துறை வங்கிகளின் லாபம் கடந்த நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. முந்தைய 2021-22-ம் நிதியாண்டில் இந்த 12 பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.66,539.98 கோடியாக மட்டுமே இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது 2023-ல் வங்கிகளின் லாபம் 57 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த 2017-18-ம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகள் ரூ.85,390 கோடி அளவுக்கு நிகர இழப்பை சந்தித்திருந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவற்றின் லாபம் ரூ.1,04,649 கோடியை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
ஒட்டுமொத்த லாபத்தில் எஸ்பிஐ பங்களிப்பு மட்டும் பாதியளவுக்கு அதாவது ரூ.50,232 கோடியாக உள்ளது. முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் எஸ்பிஐ லாபம் கடந்த நிதியாண்டில் 59 சதவீதம் அதிகரித்துள்ளது.
பேங்க் ஆப் மகாராஷ்டிரா அதிகபட்ச லாப வளர்ச்சியாக 126 சதவீதத்தை பதிவு செய்து ரூ.2,602 கோடியை ஈட்டியது. யூகோ வங்கியின் லாபம் 100 சதவீதம் அதிகரித்து ரூ.1,862 கோடியையும், பேங்க் ஆப் பரோடா லாபம் 94 சதவீதம் அதிகரித்து ரூ.14,110 கோடியையும் ஈட்டின.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் லாபம் கடந்த நிதியாண்டில் 27 சதவீதம் குறைந்தது. அந்த வங்கி 2021-22 நிதியாண்டில் ரூ.3,457 கோடியை ஈட்டிய நிலையில் 2023-ல் அதன் லாபம் ரூ.2,507 கோடியாக குறைந்து போனது.
இந்தியன் வங்கியின் லாபம் 34 சதவீதம் அதிகரித்து ரூ.5,282 கோடியாகவும், ஐஓபி லாபம் 23 சதவீதம் உயர்ந்து ரூ.2,099 கோடியாகவும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா லாபம் 61 சதவீதம் அதிகரித்து ரூ.8,433 கோடியாகவும் இருந்தன.