

காப்பீடு மற்றும் ஓய்வூதியத்தை உள்ளடக்கிய புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியிட உள்ளார். டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை நிகழ்த் தும்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று நிதி சேவைத்துறை செயலர் ஜி.எஸ். சாந்து தெரிவித்தார்.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைவருக்கும் வங்கிச் சேவை திட்டத்தை கொண்டு வந்தது. அதை இன்னும் மேம்படுத்தி காப்பீடு மற்றும் ஓய்வூதியத்தை உள்ளடக்கியதாக மோடி அறிவிக்க உள்ளார். புதிய திட்டம் மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும்.
முந்தைய திட்டம் கிராமங் களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அறிவிக்க உள்ள திட்டம் அனைத்து வீடுகளுக்குமானது. முந்தைய திட்டம் கிராமப் பகுதிகளுக்கு மட்டுமேயானது. ஆனால் புதிய திட்டம் கிராமம் மற்றும் நகரங்களில் உள்ளவர்களுக்கும் கிடைக்கும். இலக்கை முற்றிலுமாக எட்டும் வகையில் இது வகுக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக ஆறு பிரிவுகளில் இது மேற்கொள்ளப்பட உள்ளது.
முதல் கட்டமாக ஆகஸ்ட் 15-ம் தேதி தொடங்கும் இத்திட்டம் ஆகஸ்ட் 14, 2015-ல் நிறைவடையும். இதில் வங்கிக் கணக்கு தொடங்கப்படுவதோடு ஒவ்வொருவரும் ரூ. 5 ஆயிரம் வரை கடன் பெறுவதற்கான (ஓவர்டிராப்ட்) வசதி அளிக்கப் படும். இதற்காக ``ருபே’’ டெபிட் கார்ட் வழங்கப்படும். அத்துடன் ரூ. 1 லட்சம் காப்பீடு வசதியை உள்ளடக்கியதாக இது இருக்கும். இரண்டாவது கட்டம் ஆகஸ்ட் 13, 2015-ல் தொடங்கி ஆகஸ்ட் 14, 2018-ல் நிறைவடையும். முறைசாரா தொழில்களைச் சேர்ந்தவர்களுக்கு காப்பீடு மற்றும் ஓய்வூதியம் அளிக்கும் வகையில் வகுக்கப்படும்.