

கடலூர்: இவ்வாண்டு மார்ச் மாதம் 31-ம் தேதியுடன் நிறைவடைந்த 2022-23-ம் நிதியாண்டில் என்எல்சி இந்தியா நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து ரூ.1,426 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
என்எல்சி இந்தியா நிறுவன குழுமத்தின் கடந்த நிதி ஆண்டிற்கான (2022-23) தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளை வெளியிடுவதற்காக அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் கடந்த 19-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
இந்நிறுவனமானது துணை நிறுவனங்களையும் சேர்த்து கடந்த 2022-23-ம் நிதி ஆண்டில் அதிகபட்ச மின் உற்பத்தி, அதிகபட்ச மின்சக்தி ஏற்றுமதி, அதிகபட்ச பசுமை மின்சக்தி உற்பத்தி, அதிகபட்ச நிலக்கரி உற்பத்தி ஆகியவற்றை மேற்கொண்டதுடன், நிலக்கரி விற்பனை மற்றும் இயக்கத்தின் மூலம் அதிகபட்ச வருவாயையும் ஈட்டியுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிறுவனம் 2022-23-ம் ஆண்டு தனது துணை நிறுவனங்களையும் சேர்த்து ரூ.16,165 கோடியை இயக்கத்தின் மூலம் வருவாயாக ஈட்டியுள்ளது. முந்தைய 2021-22-ம் ஆண்டு இதே வகையில் ஈட்டிய வருவாயான ரூ.11,948 கோடியை விட இது 35 சதவிகிதம் அதிகம். துணை நிறுவனங்களையும் சேர்த்து 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,426 கோடியை இந்நிறுவனம் நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 2021-22-ம் ஆண்டில் ஈட்டப்பட்ட நிகர லாப தொகையான ரூ.1,116 கோடியை விட இது 28 சதவிகிதம் அதிகம்.
நாட்டின் அனல்மின் நிலையங்களுக்கான சராசரி மின் உற்பத்தித் திறன் கடந்த 2022-23-ம்நிதியாண்டில் 64.15 சதவிகிதம் என இருந்த நிலையில், என்எல்சி நிறுவன அனல் மின் நிலையங்கள் 68.86 சதவிகித உற்பத்தித் திறனுடன் இயங்கி தேசிய சராசரியை விட 4 சதவிகிதம் அதிகமாக மின் உற்பத்தி செய்துள்ளன. என்எல்சி நிலக்கரி சுரங்கத்தில், ஓராண்டில் ஒரு கோடியே 30 ஆயிரம் டன் நிலக்கரி வெட்டி எடுத்தது, ரூ.1,774 கோடிக்கு விற்பனை செய்தது ஆகிய இரண்டும் 2022-23-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புதிய சாதனைகள் ஆகும்.
என்எல்சி பங்குதாரர்களுக்கு 2022-23-ம் நிதியாண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத்தொகையாக 15 சதவிகிதம் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 20 சதவிகித பங்கு ஈவுத்தொகை வழங்க நிறுவன இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் மொத்த பங்கு ஈவுத்தொகை 35 சதவிகிதமாக, அதாவது ஒரு பங்கிற்கு ரூ.3.50 வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்ததகவலை என்எல்சி மக்கள் தொடர் புத்துறை தெரிவித்துள்ளது.