Published : 21 May 2023 08:19 AM
Last Updated : 21 May 2023 08:19 AM
சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2016-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ.1000, ரூ.500 நோட்டுகள் பண மதிப்பிழப்பால் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரும் இடையூறுகளையும், துயரங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட ரூ.2 ஆயிரம் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி திடீரென அறிவித்திருக்கிறது.
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த உடனேயே, சேமிப்பாக வைத்திருக்கக் கூடிய எளிய மக்களிடமிருந்து, அன்றாட தேவைக்கான புழக்கத்துக்கு வணிகர்களிடமே கொண்டுவரப்படும். இந்நிலையில் வணிகர்கள் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் நிலை ஏற்படும். அந்த சூழலில், பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் இடையே சர்ச்சைகள் ஏற்படும் நிலை உருவாகும்.
மேலும், சில்லறைவணிகர்கள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் வங்கிக்கு செலுத்த செல்லும்போது, அதை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகளை வணிக புழக்கத்துக்கு கொண்டுவந்து, அதை பதற்றமின்றி மாற்றிக்கொள்ள ஏதுவாக, அவகாசத்தை டிச.31-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
அதேபோல், வணிகர்களும், பொதுமக்களும் வங்கிகளில் ரூ.60 ஆயிரம் வரை மாற்றிக்கொள்ள அனுமதிஅளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT